×

கர்நாடகாவில் 1,610 கோடி சிறப்பு தொகுப்பு: மலர் விவசாயிகளுக்கு 25 ஆயிரம் நிவாரணம்: முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா பாதிப்புக்காக 1610 கோடி சிறப்பு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மலர் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடு செய்ய தலா 25 ஆயிரம் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் எடியூரப்பா கூறியதாவது:  கர்நாடக மாநிலத்தில் விவசாயிகள், தோட்டக்கலை விவசாயிகள், நெசவாளர்கள்,  கட்டிட தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள் உள்பட பொருளாதாரத்தில் பின்  தங்கியுள்ளவர்களின் நலனுக்காக 1,610 கோடி மதிப்பிலான சிறப்பு தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால், கன்னட புத்தாண்டு தினமான உகாதி பண்டிகை உள்பட கோயில் திருவிழாக்கள், கோயில்களில் சிறப்பு பூஜைகள், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதால் மாநிலத்தில் பல வகையான பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர்.

மாநிலத்தில் 11,687 ஹெக்டேர் நிலத்தில் மலர் பயிர் செய்துள்ளனர். இதில் குறைந்தபட்சம் ஒரு ஹெக்டேருக்கு 25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். அதேபோல் மாநிலத்தில் காய், கனிகள் பயிர் செய்துள்ள விவசாயிகளும் அதிகளவில் நஷ்டம் அடைந்துள்ளனர். அவர்களுக்கும் சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இதே போன்று நெசவாளர்களுக்கு, கட்டிட தொழிலாளர்களுக்கு, சிறுகுறு தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க முடிவுசெய்துள்ளோம். அமைப்பு சாரா தொழிலாளர்கள் 11.80 லட்சம் பேருக்கு வங்கி கணக்கில் தலா 2 ஆயிரம் வரவு வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Karnataka ,flower growers ,relief floriculture farmers , Karnataka, Special Collection, Flower Farmers, Corona, CM Yeddyurappa
× RELATED ஆட்சி செய்யாமல் காங்கிரஸ் வசூல் செய்கிறது : பிரதமர் மோடி