×

சென்னை மிகவும் அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை வீட்டுக்கு அனுப்பும் அவலம்

* அதிகாரிகள் அலட்சியத்தால் பொதுமக்கள் அச்சம்

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று பரவுவது சென்னையில் மிகவும் அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளது. அரசு மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. இதனால், கொரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை வீட்டுக்கு அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது. சுகாதாரத்துறையின் இதுபோன்ற அலட்சியத்தால் சென்னையில் உள்ள பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் காணப்படுகிறது. முதலில் 25 என்று தொடங்கிய நிலையில் தற்போது தினசரி 400 என்ற அளவில் தொற்று எண்ணிக்கை சென்னையில் அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று இதன் எணணிக்கை 300ஐ தாண்டியுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சென்னையில் அதிகரித்து வருவதால், சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை, கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, தண்டையார்பேட்டை ஆகிய அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்ள படுக்கைகள் நிரம்பி வழிகிறது.

புதிய நோயாளிகளுக்கு படுக்கை இல்லாமல் சுகாதாரத்துறை அதிகாரிகள் திணறி வருகிறார்கள். இதனால் சென்னையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், கல்யாண மண்டபங்களை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளனர். கொரோனா சிகிச்சைக்காக சிலர் தங்கள் கட்டிடங்களை தர மறுக்கிறார்கள். இந்த நிலையில்தான், தமிழக அரசு நேற்று முன்தினம் ஒரு அரசாணை வெளியிட்டது. அதன்படி, கொரோனா வைரஸ் நோய் பாதித்தால் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெறலாம். தனி கழிப்பறை வசதியுடன் அறை உள்ளவர்கள், அரசு மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று வீட்டிலேயே சிகிச்சை பெறலாம். காய்ச்சல் அதிகமானால் அல்லது மூச்சுவிட சிரமப்பட்டால் மட்டுமே அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு சென்னை மக்களை அச்சப்பட வைத்துள்ளது. காரணம் சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் எண்ணிக்கை எதிர்பார்க்காத அளவிற்கு உயர்ந்து கொண்டே போகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது. நோய் கட்டுப்பாடு பகுதியில் உள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். காய்ச்சல் அல்லது சளி இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்தால் போதும் என்று கூறுகிறார்கள். இதற்கு காரணம், பரிசோதனைக்கு போதிய உபகரணங்கள் அரசிடம் இல்லை என்றே கூறப்படுகிறது. அதேபோன்று புதிய நோயாளிகளை அரசு மருத்துவமனையில் சேர்க்க படுக்கை வசதியும் இல்லை.

ஏற்கனவே கொரோனா நோய் தொற்று உறுதியாகி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களைகூட, அரசு மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் வீட்டிற்கு செல்லும்படி கூறுகின்றனர். அதனால் கடந்த 2 நாட்களில் ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் சிலர் வீட்டுக்கு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. சென்னை, வேளச்சேரியில் நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. அந்த வீட்டில் உள்ள ஒருவர் சில நாட்களுக்கு முன் கோயம்பேடு மார்க்கெட் சென்று வந்துள்ளார். அவர் மூலமாகவே குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வந்துள்ளது. அந்த வீட்டின் அருகில் உள்ளவர்கள் மிகவும் பயத்துடன் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு பரிசோதனை கூட அரசு சார்பில் செய்ய மறுத்துவிட்டனர். நோய் அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்யப்படும்  என்று கூறப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

அவர் தள்ளுவண்டி மூலம் அந்த பகுதியில் காய்கறி விற்பனை செய்துள்ளார். அவரிடம் காய்கறி வாங்கியவர்கள் பயத்தில் உள்ளனர்.
மேலும், தமிழக அரசு இன்று முதல் டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி அளித்துள்ளது. இதனால் கொரோனா வைரஸ் இன்னும் வேகமாக பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். தமிழக அரசும் இதில் உள்ள ஆபத்தை புரிந்து கொள்ளாமல் காய்ச்சல், தலைவலி போன்று கொரோனா வைரஸ் பாதித்தவர்களும் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. கொரோனா வைரஸ் போன்ற பேரிடரை கையாள முடியாமல் அரசு திணறி வருவதையே இது காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

போலீஸ் பற்றாக்குறை
சென்னையில் பல பகுதிகளிலும் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒருவருக்கு நோய் பாதிப்பு இருந்தால் அந்த தெருவின் இரண்டு பக்கமும் அடைக்கப்பட்டு அங்குள்ள யாரும் வெளியே வரக்கூடாது, வெளியில் இருந்தும் உள்ளே செல்லக்கூடாது என கூறி தடை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இதுபோன்று, சென்னையில் தற்போது 200க்கும் மேற்பட்ட பகுதிகள் கன்டோன்மென்ட் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல இடங்களில் புதிய புதிய நோயாளிகள் உருவாகி வருகிறார்கள்.

இங்கெல்லாம் 24 மணி நேரமும் பாதுகாப்பு போட தற்போது சென்னையில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் காவலர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் வெளிமாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று டாஸ்மாக் திறக்கப்பட்டால், அங்கும் போலீஸ் பாதுகாப்பு தேவைப்படுகிறது. அரசு இதை எப்படி சமாளிக்கப்போகிறதோ?



Tags : home ,home tragedy ,Coronavirus ,hospital patients ,Chennai ,recipient ,hospital , Chennai, Corona, clinics, treatment
× RELATED உள்துறை அமைச்சர் பதவியை நமச்சிவாயம்...