×

தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரத்துக்கு நடந்து வந்து லாரியில் தப்ப முயன்ற வடமாநிலத்தவர்கள்: அரக்கோணத்தில் 50 பேர் சிக்கினர்

அரக்கோணம்: கொரோனா வைரஸ் தடுக்க ஊரடங்கு காரணமாக சென்னையில் தங்கி பணியாற்றும் வடமாநிலத்தவர்கள் மற்றும் வெளிமாவட்ட மக்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் முடங்கியுள்ளனர். இதேபோல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில்   ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 10 மணியளவில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மங்கம்மாபேட்டை பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். லாரியின் பின்பகுதி முழுவதும் மரப்பலகை அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. போலீசார் மரப்பலகையை அகற்றி பார்த்தனர். அப்போது ஒரு பெண், ஒரு கைக்குழந்தை உட்பட 50 வடமாநிலத்தவர்கள் மறைந்திருந்தது தெரியவந்தது.

தகவலறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தி நடத்தினர். அதில் அவர்கள் ராஜஸ்தான், உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள். சென்னை, காஞ்சிபுரம்,  தாம்பரம் பகுதிகளில் கூலி வேலை செய்து வந்ததும், ஊரடங்கால் உணவு கிடைக்காமல் அவதிப்பட்ட அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு லாரி மூலம் ஆந்திரா வழியாக செல்ல முயன்றதும் தெரிந்தது. மேலும் அவர்கள் தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரத்துக்கு நடந்து வந்து அங்கிருந்து லாரி மூலம் செல்வதும் தெரியவந்தது. இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் மீண்டும் அங்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இதுகுறித்து லாரி டிரைவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Northerners ,Kanchipuram ,Tambaram , Tambaram, Kancheepuram, Larry, Arakkonam, Corona, curfew
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...