×

கொரோனா பாதித்த இடங்கள் தவிர மற்ற இடங்களில் தடுப்புகளை அகற்ற கோரி வழக்கு: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கொரோனா பாதித்த பகுதியை தவிர மற்ற பகுதிகளில் சட்டவிரோதமாக போடப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு வருகிற 14ம் தேதி பதில் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள  பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொரோனா பாதித்த வீடுகளை  அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் காவல்துறை தடுப்பு ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். பல பகுதிகளில் தெருக்களிலிருந்து வெளியே செல்ல முடியாத அளவிற்கு தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு சில பகுதிகளில் கொரோனா தொடர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் வசிக்கும் பகுதிகளிலும் தடுப்புகளை அகற்றாமல் காவல்துறை தொடர்ந்து வைத்துள்ளனர். இதனால் அந்த பகுதி மக்கள் முழுவதுமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தேவையில்லாத சட்டவிரோதமான தடுப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.  இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி , புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வீடியோ கான்பிரன்சிங் முறையில் விசாரணைக்கு வந்தது . அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வக்கீல் விஜய் நாராயண்  கொரோனா பாதித்த பகுதிகளுக்கு மட்டுமே தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறி அதற்கான பட்டியலை தாக்கல் செய்தார்.

  வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு எந்த ஒரு தடையும் இருக்கக்கூடாது.  அதே வேளையில் சட்டவிரோதமாக வெளியே சுற்றுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து  அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என  உத்தரவிட்டு விசாரணையை 14ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Tags : removal ,areas ,State ,Corona ,Respondent Icort Order ,High Court ,elsewhere , Corona, Government of Tamil Nadu, Madras High Court
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்