×

ஊரடங்கால் குடும்பங்கள் உருக்குலைந்து விட்டன: சாப்பாட்டுக்கே தவிக்கும் போது சரக்கு கடை திறப்பது நியாயமா?.. இல்லத்தரசிகள் கண்ணீர்

திருச்சி: ஊரடங்கு காரணமாக வேலையின்றி பல குடும்பங்கள் ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியின்றி திண்டாடி வரும் நிலையில், மதுக்கடைகளை திறப்பது நியாயமா என்று இல்லத்தரசிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி மாலை 6 மணி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆட்டோ, கார் ஓட்டுனர்கள், கட்டிட தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள், சுமை தூக்குபவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் வேலை இழந்து வீடுகளில் முடங்கினர். வேலையின்றி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக ரூ.1000 நிவாரணம் மற்றும் தலா 1 கிலோ அரிசி, பருப்பு, சர்க்கரை, 1 லிட்டர் எண்ணெய் ஆகியவை அரசு சார்பில் ரேஷனில் வழங்கப்பட்டது.

ஆனாலும் 2 குழந்தை உள்பட 4 பேர் வசிக்கும் ஒரு குடும்பத்துக்கு இது போதாததால், பல குடும்பங்கள் வறுமையில் வாடின. கடன் வாங்கி குடும்பத்தை ஓட்ட வேண்டிய நிலை ஏற்பட்டதோடு, நிவாரண பொருட்கள் மற்றும் சாப்பாடு தரும் தன்னார்வலர்களின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் பரிதாப நிலையும் ஏற்பட்டது. இந்தநிலையில், தமிழக அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அமல்படுத்தி உள்ளது. அதில் குறிப்பாக நாளை (7ம் தேதி) முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக தலைவர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இல்லத்தரசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருச்சி பீமநகரை சேர்ந்த இல்லத்தரசி சுமதி கூறுகையில், எனது கணவர் ஆட்டோ ஓட்டுகிறார். எங்களுக்கு 2 குழந்ைதகள் உள்ளனர். தினமும் ரூ.300 முதல் 500 வரை சம்பாதித்து வருவார். வேறு எந்த வருமானமும் எங்களுக்கு இல்லை. கடந்த 40 நாளாக வேலையின்றி வீட்டிலேயே முடங்கி உள்ளார். அரசு கொடுத்த ரூ.1000 மற்றும் ரேஷன் பொருட்கள் ஒரு வாரத்துக்கு கூட வரவில்லை. கையில் இருந்த சேமிப்பு பணத்தை வைத்தும், கடன் வாங்கியும் குடும்பத்தை ஓட்டினோம். இந்தநிலையில், நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. எனது கணவருக்கு மதுப்பழக்கம் உண்டு.

இவ்வளவு நாட்களாக மது குடிக்காமல் இருந்து வந்தவர், கடன் வாங்கி மதுக்குடிக்க ஆரம்பித்து விடுவார். இது குடும்பத்துக்கு மேலும் கடன் சுமையை தான் அதிகரிக்கும். பொருளாதார சீரழிவால் குடும்பங்கள் தள்ளாடும் நிலையில், அவசர அவசரமாக மதுக்கடைகளை திறப்பது ஏன் என்று புரியவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பொருளாதாரம் உயர தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து விட்டு, அதன்பிறகு மதுக்கடைகளை திறக்கட்டும் என்றார். பொன்மலையை சேர்ந்த இல்லத்தரசி விஜயலட்சுமி கூறுகையில், குவார்ட்டரோடு கோழி பிரியாணியும் சைடிஷ்ஷாக கொடுத்து விடுங்கள். குவார்ட்டரை எனது கணவர் குடிக்கட்டும், கோழி பிரியாணியை நானும், குழந்தைகளும் சாப்பிடுகிறோம்.

ஏனெனில் கடந்த 10 நாட்களாக நாங்கள் ஒருவேலை உணவு தான் சாப்பிட்டு வருகிறோம். என் கணவர் கொத்தனார். ஒரு நாள் ஊதியம் ரூ.600. வேலை முடிந்து வரும்போதே போதையில் தான் வீட்டுக்கு வருவார். இவ்வளவு நாளாக மது கிடைக்காமல் திண்டாடிய அவர், இனி வேலையை விட மதுக்கடையே அவருக்கு முக்கியமாக தெரியும். அரசாங்கம் இப்படி செய்யலாமா என கண்ணீருடன் கூறினார்.

Tags : families ,grocery store ,Freight Store ,Housewives , Curfew, Freight Store, Housewives, Tears
× RELATED திண்டிவனத்தில் 3 மாடிகளை கொண்ட மளிகை கடையில் தீ விபத்து