×

கொரோனாவால் அதிரடி மாற்றம் தொழில் முனைவோராக மாறிய ஆதரவற்றோர்

நெல்லை: நெல்லையில் கொரோனாவால் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சாலைகளில் ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்த நூற்றுக்கணக்கானோர் கடந்த 40 நாட்களாக ஒரே இடத்தில் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் தொழில்முனைவோராக மாறியுள்ளனர். நெல்லை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகளில் ஆதரவற்ற நிலையில் ஏராளமானோர் சுற்றித் திரிந்தனர். இவர்களில் பலர் உறவுகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் ஆவர். தற்போது உலகையே ஆட்டி படைத்து வரும் கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவிலும் பரவ துவங்கியதையடுத்து கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் சாலைகளில் சுற்றித்திரிந்த ஆதரவற்றோர், உணவு கிடைக்காமல் பரிதவித்தனர்.நெல்லை மாவட்ட நிர்வாக உத்தரவுப்படி மாநகராட்சி நிர்வாகம், ஆர் சோயா தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து நெல்லையில் சாலைகளில் சுற்றித் திரிந்தவர்களை மீட்டு ஒரே இடத்தில் சங்கமிக்க வைத்தனர். நெல்லை டவுன் கல்லணை பள்ளி வளாகத்தில் இவர்களுக்காக தற்காலிக முகாமும் திறக்கப்பட்டது. இங்கு அவர்களுக்கு முதலில் சிகை திருத்தப்பட்டு புதிய ஆடைகள் வழங்கப்பட்டன. மேலும் 3 வேளையும் சத்தான உணவு மற்றும் டீ, பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கி பராமரித்தனர். இவர்களில் மனநலம் பாதிக்கப்பட்டிருந்த சில ஆண்களும், பெண்களும் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் மனநல காப்பகத்தில் தனித்தனியாக ஒப்படைக்கப்பட்டனர்.

இதையடுத்து எஞ்சிய 109 பேரும் முகாமில் தொடர்ந்து தங்க வைக்கப்பட்டு பராமரிப்பில் இருந்து வருகின்றனர். மேலும் இவர்களுக்கு கடந்த 41 நாட்களாக பல்வேறு உளவியல் ஆலோசனைகள் மற்றும் மனநல மாற்றங்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருவதோடு மனநல டாக்டர்கள் தினமும் கலந்துரையாடி ஊக்கப்படுத்தினர். காலை தினமும் யோகா பயிற்சியும் அளிக்கப்படுகிறது. பன்முகத்திறமை மிக்க பிரமுகர்கள் பலரும் தினமும்  இங்கு வந்து சொற்பொழிவாற்றுகின்றனர். அவ்வப்போது திரைப்படமும் திரையிடப்பட்டு வருகிறது. தடை உத்தரவு முடிந்து இந்த முகாமில் இருந்து அவர்கள் வெளியேறும்போது சுயமாக வாழ்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர். இதற்காக சிறிய அளவிலான கைத்தொழில் பயிற்சி வழங்கும் முகாம் நேற்று துவங்கியது. முதல் நாளில் 80 பேருக்கு கைத்தொழில் பயிற்சியாக பேப்பர் கவர் தயாரிப்பு, பழம் பொக்கே தயாரிப்பது போன்றவை கற்றுக் கொடுக்கப்பட்டன. இதில் முதல் நாளிலேயே 500 கவர்கள் தயாரித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். தொடர்ந்து இதுபோன்று பல்வேறு தொழில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

குறிப்பாக நாள்தோறும் குறைந்தது ரூ.300 முதல் 500 வரை வருவாய் பெற இதுபோன்ற பயிற்சி மற்றும் ஊக்கம் அளிக்கப்படுகிறது. சுய உழைப்பால் தன்மானத்துடன் வாழ்வதற்காக ஆர் சோயா அமைப்பை சேர்ந்த  சரவணன் தலைமையில் மாநில பயிற்றுநர் அஸ்வதி, ஜோதி, மாரிமுத்து ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதன் காரணமாக சாலைகளில் ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்த நூற்றுக்கணக்கானோர் தொழில் முனைவோராக தற்போது மாறியுள்ளனர் என்பதே நிதர்சனம்.


Tags : orphans ,Corona ,entrepreneur ,Action Change , orphans, Action Change ,entrepreneur ,Corona
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...