×

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் உப்பு தூவி அரியவகை மீன்கள் சாகடிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி தெப்பக்குளத்தில் உப்பு தூவி அரியவகையான கோல்டுபிஷ்  மீன்கள் சாகடிக்கப்பட்டன.தூத்துக்குடி சிவன்கோயில் பகுதியில் உள்ள தெப்பக்குளத்தில் பல வகை மீன்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அப்பகுதியை சேர்ந்த பிரமுகர்கள் சிலர் வண்ண மீன்களை வாங்கி தெப்பக்குளத்தில் விட்டிருந்தனர்.
இதற்கு அப்பகுதி பொதுமக்கள் பொரி உள்ளிட்ட உணவளித்து வருவதால் சில ஆண்டுகளில் அந்த மீன்கள் பெரிய அளவில் அதிகமாகவும், அழகாகவும் வளர்ந்து காண்போரை கவர்ந்து வந்தன. இந்நிலையில் நேற்று தெப்பக்குளத்தில் உள்ள வண்ண மீன்களில் கோல்டுபிஷ் வகையை சேர்ந்த மீன்கள் மட்டும் 100க்கும் மேற்பட்டவை இறந்து மிதந்தன.

ஒரேநேரத்தில் 100க்கும் மேற்பட்ட மீன்கள் இறந்தது அப்பகுதியில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இவற்றில் ஒவ்வொரு மீனும் சுமார் 2000 ரூபாய்க்கு மேல் மதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. தெப்பக்குளத்தின் கரைகளில் கல் உப்பு மற்றும் அயோடின் உப்புகள் அதிக அளவில் கொட்டிக்கிடந்தன. மர்ம நபர்கள் அயோடின் உப்பு பாக்கெட்களை தெப்பக்குளத்திற்குள் வீசியுள்ளது தெரியவந்தது. இதனால் குறிப்பிட்ட வகை கோல்ட் பிஷ் மட்டும் உணவு என நினைத்து கல் உப்பை சாப்பிட்டதால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் அதே குளத்தில் உள்ள பிற வண்ண மீன்கள் வழக்கம்போல எவ்வித மாற்றமும் இல்லாமல் பாதுகாப்பாக உள்ளன. இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Tuticorin , Salt , species , Tuticorin
× RELATED தூத்துக்குடியில் பணப்பட்டுவாடா செய்ததாக ஒருவர் கைது!!