×

வெளிமாவட்டங்களில் இருந்து மல்லப்புரம் மலைச்சாலை வழியாக கிராமங்களுக்கு வரும் வாகன ஓட்டிகள்: கடமலை-மயிலை ஒன்றியத்தில் கொரோனா அபாயம்

வருஷநாடு: தேனி மாவட்டத்தில் போலீசார் சோதனைக்கு பயந்து மல்லப்புரம் மலைச்சாலை வழியாக வரும் வாகன ஓட்டிகளால் கடமலை மயிலை ஒன்றியத்தில் கொரோனா அபாயம் ஏற்பட்டுள்ளது. கடமலை-மயிலை ஒன்றியத்தில் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ஒன்றியத்திற்குள் வருவதற்கு துரைச்சாமிபுரம் வழியாக பிரதான சாலையும், மல்லப்புரம் வழியாக மலைச்சாலையும் அமைந்துள்ளது. மலைச்சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும்பாலும் துரைச்சாமிபுரம் பிரதான சாலையையே பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் மதுரை, சென்னை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் வேலை செய்து வருகின்றனர். தற்போது சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தாக்கம் அதிகளவில் உள்ளது.

அதேசமயம் கடமலை மயிலை ஒன்றியத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. எனவே தற்போது 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து சென்னை மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கடமலை மயிலை ஒன்றிய கிராமங்களுக்கு வரத்தொடங்கியுள்ளனர். இவ்வாறு வருபவர்களை தேனி மாவட்ட எல்லைகளான தேவதானப்பட்டி மற்றும் ஆண்டிபட்டி பகுதிகளில் போலீசாரும் சுகாதாரத் துறையினரும் தீவிர சோதனைக்கு உட்படுத்தி அனுப்புகின்றனர். மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களின் செல்போன் எண் மற்றும் முகவரியை சேகரித்து அவர்கள் வீட்டில் தனிமை படுத்துவதை கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் சிலர் போலீசார் கண்காணிப்பை மீறி மலப்புரம் மலைச்சாலையை பயன்படுத்தி தாழையூத்து கிராமம் வழியாக, கடமலை மயிலை ஒன்றிய கிராமங்களுக்குள் நுழைந்து வருகின்றனர். இதனால் கடமலை மயிலை ஒன்றியத்தில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை போக்குவரத்து இன்றி காணப்பட்ட மலைச்சாலை தற்போது போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை ஆக மாறிவிட்டது. கடமலை மயிலை ஒன்றியத்திற்கு மட்டுமல்லாமல் இந்த மலைச்சாலையில் பயன்படுத்தி தேனி கம்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் வாகன ஓட்டிகள் எளிதாக சென்றுவிடுகின்றனர். எனவே, மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தாழையூத்து கிராமத்தில் போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் இணைந்து மலைச்சாலை வழியாக வரும் வாகன ஓட்டிகள் அனைவரையும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Motorists ,Corona ,villages ,highway ,Mallapuram , Motorists, villages , Mallapuram, highway, Corona,
× RELATED திருப்பத்தூரில் 14 கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு