×

மாற்று இடங்களில் கடைகளை நடத்த மறுப்பு நெல்லை நயினார்குளம் மார்க்கெட்டிற்கு சீல் வைப்பு: காய்கறி லாரிகள் திருப்பி அனுப்பப்பட்டன

நெல்லை: சமூக இடைவெளியை காரணம் காட்டி நெல்லை டவுன் நயினார்குளம் மார்க்கெட்டிற்கு நேற்று மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். நேற்று மார்க்கெட்டிற்கு வந்த காய்கறி லாரிகள் திருப்பி அனுப்பப்பட்டன.ெநல்லை டவுன் நயினார்குளம் காய்கறி மார்க்கெட்டிற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வருகின்றன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தின் உள்ளூர் பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் வரத்து அதிகமாக காணப்படும். பக்கத்து மாநிலமான கேரளாவின் காய்கறி தேவைகளை பூர்த்தி செய்வதிலும் நெல்லை நயினார்குளம் மார்க்கெட் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கிருந்து தினமும் டன் கணக்கில் காய்கறிகள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஊரடங்கு காலக்கட்டத்தில் நயினார்குளம் மார்க்கெட்டில் உள்ள சிறு வியாபாரிகளின் கடைகள் மட்டும் டவுன் சாப்டர் பள்ளி மைதானத்திற்கு மாற்றப்பட்டன. 30க்கும் மேற்பட்ட மொத்த வியாபாரிகளின் கடைகள் நயினார்குளம் மார்க்கெட்டிலேயே இயங்கி வந்தன. இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவல் காரணமாக, நெல்லையிலும் முக்கிய மார்க்கெட்டுகளை கண்காணிக்க மாநகராட்சி முன்வந்தது.

அதன் அடிப்படையில் நெல்லை நயினார்குளம் மார்க்கெட்டில் இயங்கி வரும் கடைகளை நெல்லை புதிய பஸ் நிலையம் மற்றும் பழையபேட்டை லாரி முனையம் ஆகிய இடங்களுக்கு மாற்றிட மாநகராட்சி முடிவு செய்தது. வியாபாரிகள் சங்க நிர்வாகிகளை அழைத்து அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தெரிவித்தது. ஆனால் நயினார்குளம் மார்க்கெட் சங்க நிர்வாகிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், அதற்கு யாரும் சம்மதிக்கவில்லை. மார்க்கெட்டில் உள்ள கடைகளை சமூக விலகல் அடிப்படையில் தள்ளி தள்ளி நடத்தவும், பக்கத்தில் உள்ள காலியிடங்களுக்கு கடைகளை கொண்டு செல்லவும் முடிவு செய்யப்பட்டது. இங்கிருந்து புதிய பஸ் நிலையத்திற்கோ அல்லது பழைய பேட்டைக்கோ கடைகளை மாற்றுவதில் சிரமங்கள் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் அங்கிருந்து கடைகளை மாற்றுவதில் மாநகராட்சி உறுதியாக இருந்தது. இதனால் வேறு வழியின்றி நேற்று முதல் காலவரையின்றி கடைகள் மூடப்படுவதாக நயினார்குளம் வியாபாரிகள் அறிவித்தனர். அதற்கான அறிவிப்பு பலகையும் மார்க்கெட் வாசலில் வைக்கப்பட்டது.

அதை தொடர்ந்து நேற்று காலை அங்கு சென்ற தச்சை மண்டல உதவி கமிஷனர் அய்யப்பன், செயற்பொறியாளர் (திட்டம்) நாராயணன், உதவி செயற்பொறியாளர் சாந்தி, சுகாதார அலுவலர் அரசகுமார், இளநிலை பொறியாளர் தனராஜ் சத்தியநாதன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நயினார்குளம் மார்க்கெட்டிற்கு சீல் வைத்தனர். சமூக பரவலை மார்க்கெட்டில் வியாபாரிகள் கடைப்பிடிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.நயினார்குளம் மார்க்கெட் மூடப்பட்டதால் சில்லறை வியாபாரிகள் நேற்று திண்டாட்டத்திற்கு உள்ளாயினர். காய்கறி லோடு ஏற்றி வந்த சில லாரிகளும் திருப்பி அனுப்பப்பட்டன. இந்நிலையில் வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் நேற்று கலெக்டரை சந்தித்து தங்கள் நிலைமையை விளக்கினர்.Tags : locations , alternative, locations,Paddy, Nainarkulam, Market,
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் லாரிகளை மடக்கி வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைது