×

சாலைகளில் அணிவகுத்து செல்லும் வாகனங்கள்: வழக்குப்பதிவு குறைந்தது

நாகர்கோவில்: போலீசாரின் வாகன சோதனை மற்றும் வழக்குபதிவு குறைந்துள்ளதால் குமரி மாவட்ட சாலைகளில் வாகனங்கள்  மீண்டும் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும், கட்டுப்படுத்தும் வகையிலும் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. குமரி மாவட்டத்திலும் முழு ஊரடங்கு, 144 தடை உத்தரவு போன்ற கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வந்தது. தற்போது அது 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறி சாலையில் வாகனங்களுடன் வந்தவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே வாகனங்களில் அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்லலாம் என்று அறிவுரை வழங்கப்பட்டது.இந்தநிலையில் மே 4 முதல் ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டுள்ளது. ஒரு சில கம்பெனிகள் திறந்து செயல்பட மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் தனி கடைகள் வரும் 9ம் தேதி முதல் திறந்து செயல்படலாம் என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.

இருப்பினும் தமிழக அரசின் உத்தரவை பின்பற்றி நேற்று முன்தினம் பகலில் கடைகள் திறக்கப்பட்டு பின்னர் மூடப்பட்டன. இருப்பினும் கட்டுமானம் சார்ந்த தொழில்களில் உள்ள தொழிலாளர்கள், பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றுவோர், வியாபாரிகள் என்று காலையில் சாலைகளில் வாகனங்களில் செல்வோர் அதிகரித்துள்ளனர். வழக்கமான கட்டுப்பாடுகள் தொடர்கிறது என்றபோதிலும் சாலைகளில் அணிவகுக்கும் வாகனங்கள் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. சரக்கு வாகனங்களும் அதிக அளவில் வரத்தொடங்கியுள்ளன. அதே வேளையில் போலீசாரின் வாகன சோதனை மற்றும் கெடுபிடிகள் குறைந்துள்ளதும் இதற்கு காரணமாக கருதப்படுகிறது. இதனால் வாகனங்கள் எண்ணிக்கையும், மக்கள் நெரிசலும் சாலைகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடை வீதிகளில் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளன. ரேஷன்கடைகளில் பொருட்கள் வாங்க வருகின்றவர்கள், வங்கிகள், தபால் நிலையங்கள் போன்றவற்றில் வருகின்றவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

கடந்த 2 நாட்களாக வாகன தணிக்கை குறைந்து வழக்குகள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. தினசரி 200 க்கும் மேற்பட்ட வழக்குகள் வரை குமரி மாவட்டத்தில் பதிவு செய்து வந்த காவல்துறையினர் வழக்குபதிவு எண்ணிக்கையை தற்போது குறைத்துள்ளனர். மே 3ம் தேதி மொத்தம் 82 வழக்குகளும், நேற்று 4ம் தேதி 90 வழக்குகளும் மட்டுமே பதிவு செய்துள்ளனர். இதில் நேற்று நாகர்கோவிலில் 21, தக்கலையில் 36, குளச்சலில் 12, கன்னியாகுமரியில் 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 95 நபர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு 24 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு ஆட்டோ, 66 பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 41வது நாளை ஊரடங்கு எட்டியுள்ள நிலையில் மாவட்டத்தில் மொத்தம் 7176 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 8553 நபர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டதில் 2551 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 7 லாரிகள், 52 கார்கள், 59 ஆட்டோக்கள், 5500 பைக்குகள் என்று மொத்தம் 5618 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மால்களில் போலீசார் திடீர் சோதனை
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பல பகுதிகளில் கடைகள் திறந்து செயல்பட வரும் நாட்களில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பதால் பலரும் கடைகளை தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் சில இடங்களில் மால்கள் போன்றவற்றையும் சுத்தப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் வடசேரி பகுதியில் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். ஊரடங்கு உத்தரவு முடியும் வரை மால்கள் போன்றவற்றை திறக்க அனுமதியில்லை. எனவே மூடிக்கிடக்கின்ற கடைகளை திறந்து வைத்து சுத்தம் செய்யக்கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து கடைகளில் இருந்தவர்களை திருப்பி அனுப்பினர்.


Tags : roads , Vehicles, marching, roads, records ,
× RELATED பங்குனி உத்திரத்தை ஒட்டி...