×

குமரியில் தேசிய ஊரக வேலை திட்டத்தில் முக கவசம், சமூக விலகலுடன் பெண்கள் வேலையை தொடங்கினர்: 40 நாட்களுக்கு பின் மீண்டும் விறுவிறுப்பு

நாகர்கோவில்:  குமரி மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ்  பெண்கள் வேலையை செய்ய தொடங்கினர். சமூக விலகல், முக கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது. தற்போது 3ம் கட்டமாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில விதிமுறைகளை மத்திய, மாநில அரசுகள் தளர்த்தி உள்ளனர். அதன்படி கிராமப்புறங்களில் தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணிகளை செய்யலாம். அவ்வாறு பணிகளுக்கு அழைக்கப்படும் பெண்கள் 50 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு பணி கொடுக்காமல், அவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு பணி வழங்கலாம். வேலை செய்யும் பகுதியில் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். அவ்வப்போது சோப்பினால் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.  கூடி நின்று பேசுவதை தவிர்க்க வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகளை மாநில அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி தற்போது குமரி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் கால்வாய்களை தூர்வாரும் பணிகளை பெண்கள் தொடங்கி உள்ளனர்.

நாகர்கோவில் அடுத்த கணியாகுளம் ஊராட்சிக்குட்பட்ட பண்டார தோப்பு மேட்டுமடை பிலாங்குழி ஓடை நீர் வரத்து கால்வாய் பலப்படுத்தி, மேம்பாடு செய்தல் பணி நடக்கிறது. 15 பெண்கள் இந்த பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்களிடம் பேசுகையில், 40 நாட்களாக தடை உத்தரவால் வேலை வாய்ப்பை இழந்தோம். தமிழக அரசு கொடுத்த ரூ.1000ம் பணமும் செலவழிந்தது. வருமானம் இல்லாமல் தவித்த எங்களுக்கு இப்போது மீண்டும் வேலை கொடுத்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது என்றனர். இந்த பணியை கணியாகுளம் ஊராட்சி மன்ற தலைவர் ஏஞ்சலின் ஷரோனா செல்வக்குமார் பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில் தென் மேற்கு பருவமழைக்கு முன், ஊராட்சிக்குட்பட்ட கால்வாய்களை தூர்வார வேண்டும் என திட்டமிட்டுள்ளோம்.

தற்போது தடை உத்தரவுக்கு பின் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பெண்கள் பணிகளை தொடங்கி உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் என்ன வழிமுறைகள் கூறி உள்ளார்களோ? அதை பின்பற்றி பணிகளை செய்து வருகிறோம். மேலும் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணிகளை நடக்கிறது. எங்கள் பகுதியில் யாருக்கும் எந்த வித பாதிப்பு வந்து விடாத வகையில் விழிப்புடன், சுகாதாரத்துடன் இருக்க வேண்டும என வலியுறுத்தி வருகிறோம் என்றார். தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணி இல்லாமல் இருந்ததால், கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் பலர் மீண்டும் வயல் வேலைக்கு செல்ல தொடங்கினர். தற்போது மீண்டும் இந்த பணிகள் தொடங்கி இருப்பதால், பல கிராமங்களில் வயல் வேலைக்கு பெண் பணியாளர்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.



Tags : Women ,National Rural Work Program ,Kumari ,resumption , Women,work ,face ,social ,alienation
× RELATED தேசிய ஊரக வேலை திட்ட விதிமுறையில்...