6 மாதம் சிறைத் தண்டனை; ஆரோக்கிய சேது செயலி இல்லாதது தண்டனைக்குரிய குற்றம்...உ.பி. கவுதம் புத்த நகர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

நொய்டா: உத்தரப் பிரதேசம் மாநிலம் கவுதம் புத்த நகர் மாவட்டத்தில் செல்பேசியில் ஆரோக்கிய சேது செயலி இல்லாமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், நாடு முழுவதும் ஊரடங்கு மே 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த திங்கள் கிழமை முதல் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.  இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 14-ம் தேதி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, முக்கியமாக, கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, நிச்சயமாக ‘ஆரோக்யா சேது’ மொபைல் ஆப்பை பதிவிறக்கவும். இந்த பயன்பாட்டைப்  பதிவிறக்க மற்றவர்களை ஊக்குவிக்கவும் என்றார்.

கொரோனா உள்ளவர்களையும், அவர்களின் தொடர்புகளையும் கண்டறிய உதவும் ஆரோக்கிய சேது என்கிற செல்பேசிச் செயலியைத் தேசியத் தகவல் மையம் உருவாக்கியுள்ளது. இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் நொய்டாவை உள்ளடக்கிய கவுதம் புத்த நகர் மாவட்டத்தில் குடியிருப்போர், வெளியிடங்களில் இருந்து மாவட்டத்தில் நுழைவோர் இந்தச் செயலியைச் செல்பேசியில் வைத்திருப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கிய சேது செயலி இல்லாமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் போன் வைத்திருந்து அதில் ஆரோக்கிய சேது செயலி இல்லாமல் இருந்தால் அவர் மீது அரசின் உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை என்னும் பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் ஆயிரம் ரூபாய் அபராதமோ, 6 மாதம் வரை சிறைத் தண்டனையோ விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>