×

மாதவரம் ஆவின் பால் நிறுவனத்தில் மேலும் 6 ஊழியர்களுக்கு கொரோனா: உற்பத்தி பாதிக்கும் அபாயம்

திருவொற்றியூர்: மாதவரம் ஆவின் பால் நிறுவனத்தில் மேலும் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாதவரம் பால் பண்ணையில் உள்ள ஆவின் நிறுவனத்தில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பால் உற்பத்தி, பால் பாக்கெட் ஏற்றுதல், இறக்குதல் மற்றும் பதிவேடு பராமரித்தல் போன்ற பணிகளில் மூன்று ஷிப்ட்களில் வேலை செய்து வருகின்றனர். கடந்த 2 தினங்களுக்கு முன், இங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு    கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, சக ஊழியர்களுக்கு பரிசோதனை செய்தபோது, நேற்று முன்தினம் மேலும் ஒரு ஊழியருக்கு நோய் தொற்று உறுதியானது. இதனால், பீதியடைந்த சக ஊழியர்கள் பெரும்பாலானோர் கடந்த 3 நாட்களாக வேலைக்கு வரவில்லை. இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தினசரி காலை 5 மணிக்கு கிடைக்க வேண்டிய பால் பாக்கெட்கள் தற்போது காலை 7 மணிக்கும், 9 மணிக்கும் கிடைக்கிறது.

உற்பத்தி குறைவினால் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒப்பந்த ஊழியர்கள் மூலம் பால் உற்பத்தி செய்தாலும் சராசரியான உற்பத்தி இலக்கை அடைய முடியாமல் அதிகாரிகள் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில், நேற்று பதிவேடு ஊழியர்கள் 4 பேர், உற்பத்தி பிரிவில் 2 பேர் என மேலும் 6 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதியானது. இதனால், அங்கு வைரஸ் தொற்று 8 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நோய் தொற்று பரவுவதை தடுக்க குறிப்பிட்ட நாட்களுக்கு உற்பத்தி நிறுத்தப்பட்டு, உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அடுத்தடுத்து வைரஸ் தொற்று அதிகமாவதால் ஊழியர்களின் வருகை மேலும் குறைந்து, பால் உற்பத்தி பாதிக்கப்பட்டு கடும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.



Tags : Corona ,Aavin Dairy , Monthly Ave Dairy Company, 6 employees, Corona
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...