×

விவசாயிகளான விளையாட்டு வீரர்கள்

சண்டிகர்: நகர்ப்புற விளையாட்டு வீரர்கள் வீட்டில் முடங்கி இருக்கும் சூழலில், கிராமப்புறங்களை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அறுவடை உள்ளிட்ட விவசாய வேலைகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  பெரு நகரங்களில் இருக்கின்ற விளையாட்டு வீரர்கள் வீட்டை துடைப்பது, புல் வெட்டுவது,  சமையலில் மனைவிக்கு உதவுவது, கூடவே  அட்வைஸ் மழை பொழிவது என அசத்துவதுடன், அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகின்றனர். அதேநேரத்தில் கிராமப்புறங்களில் வசிக்கும் விளையாட்டு வீரர்கள் இந்த ஊரடங்கு நேரத்தில் விவசாய வேலைகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக விவசாயத்தை நம்பியிருக்கும் அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் அவர்கள் நேரடியாக விவசாய வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய ஹாக்கி வீராங்கனை பூனம் ராணி மாலிக்,  தனது 2 ஏக்கர் விவசாய நிலத்தில் விளைந்த கோதுமையை அறுவடை செய்யும் பணியில் குடும்பத்தினருடன் சேர்ந்து  ஈடுபட்டுள்ளார். இயந்திரங்கள் மூலம் இல்லாமல் கைகளினாலேயே அறுவடை நடக்கிறது. அதனால் கடந்த 4 நாட்களில் பாதி அறுவடை தான் முடிந்துள்ளதாம். இது குறித்து பூனம், நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்தினருடன் இணைந்து அறுவடைப் பணியில் ஈடுபட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த 4 நாட்களில் அரிவாளை எப்படி கையாள்வது என்பதில் நல்ல அனுபவம் கிடைத்தது’ என்று தெரிவித்தார்.

குத்துச்சண்டை வீரர் அமித் பாங்கலும் விவசாயப் பணிகள் மட்டுமன்றி அறுவடை செய்த கோதுமை மூட்டைகளை வாகனங்களில் ஏற்றி இறக்கும் பணியையும் இலகுவாக  செய்து வருகிறார். ’வழக்கமாக அறுவடை நடைபெறுகின்ற காலங்களில் விளையாட்டு பயிற்சிக்காகவும்,  போட்டிகளில் பங்கேற்கவும் வெளியூரில் இருப்பது வழக்கம்.  ஊரடங்கு காரணமாக இந்த முறை வீட்டில் இருக்கிறேன். அதனால் எங்கள் விவசாய நிலங்களில் உள்ள வேலைகளை செய்வதுடன், கோதுமை  மூட்டைகளை வாகனங்களில் ஏற்றி  சந்தைகளுக்கு அனுப்பும் பணிகளையும் செய்து வருகிறேன். இந்த வேலைகளை செய்வது  குத்துச்சண்டை வீரனாக  நல்ல பயிற்சியாகவும் இருக்கிறது, கூடவே ஒரு விவசாயி மகனாக மகிழ்ச்சியாகவும் இருக்கிறது’ என்கிறார் அமித்.

கலக்கும் கபடி வீரர்கள்:  கபடி வீரர்கள் பலரும் எளிய விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். அதனால் ஊரடங்கு காரணமாக  இப்போது விளையாட்டுப் போட்டிகள் ஏதும் இல்லாததால், அரசு வேலையில் உள்ள கபடி வீரர்களைத் தவிர மற்ற வீரர்கள் நிலத்தில் விவசாயிகளாக இருக்கின்றனர்.


Tags : athletes , Farmers , athletes
× RELATED திருச்சி கே.கே.நகர் ராஜாராம் சாலை...