×

அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் முதல் முறையாக தொலைபேசியில் வழக்கு விசாரணை, நேரடி ஒலிபரப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் முதல் முறையாக, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தொலைபேசி மூலமாக வழக்கை விசாரித்தது. அமெரிக்காவில் தற்போது கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகின்றது. இதுவரை பல லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு சுமார் இரண்டாயிரம் பேர் வரை உயிரிழந்து வருகின்றனர். கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற அறைகளில் வழக்கு விசாரணையின்போது பலர் வரும்போது கொரோனா பரவும் அபாயம் உள்ளதாலும், பாதுகாப்பின்மை காரணமாகவும் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படவேண்டிய 20 வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டது.

குறிப்பாக 6 நீதிபதிகள் 65 வயதுடையவர்கள் என்பதால், அவர்கள் உடனடியாக நோய் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடும் என்பதாலும் வழக்குகள் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.  இந்நிலையில் நீதிபதிகள் இந்த மாதத்தில் 6 நாட்களில் 10 வழக்குகளை தொலைபேசி மூலமாக விசாரிப்பதற்கு முடிவு செய்துள்ளனர். இதன்படி நேற்று முன்தினம் முதல் முறையாக தொலைபேசி மூலமாக வழக்கு விசாரணை தொடங்கியது. நீதிமன்றம் தொடங்கும் வழக்கமான நேரமான சரியாக 10 மணிக்கு விசாரணையை நீதிபதிகள் தொடங்கினார்கள். 9 நீதிபதிகள் மற்றும் 2 வழக்கறிஞர்கள் இதில் பங்கேற்றனர்.

இந்த விசாரணையின்போது நீதிமன்ற அறையிலும் நீதிபதிகள் இருந்தனர். இந்த விசாரணையானது சுமார் ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் நீடித்தது. இந்த வழக்கு விசாரணை நேரடியாக ஒலிபரப்பு செய்யப்பட்டதால் ஒரே நேரத்தில் உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களால் கேட்க முடிந்தது.

Tags : US Supreme Court ,telephone trial , US Supreme Court, Telephone, Trial, Corona, Curfew
× RELATED உயர்பதவிக்கு போட்டியிடும் ஒருவரை தடை...