×

வாடகை வசூலிக்கும் வீட்டு உரிமையாளாகள் மீது நடவடிக்கை கோரிய மனு டிஸ்மிஸ்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

* அரசின் உத்தரவை உச்ச நீதிமன்றம் அமல்படுத்த முடியாது. மேலும், இதுதொடர்பான பிரச்னைகளை கையாள ஏற்கனவே அரசு தரப்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

புதுடெல்லி: ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அரசின் உத்தரவை மீறி வாடகை வசூலிக்கும் வீட்டு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் மாணவர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரிடம் ஒரு மாத வாடகை வசூலிக்கக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. இதை மீறி, வாடகை தராததற்காக வீட்டை காலி செய்ய வலியுறுத்தும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வக்கீல்கள் பவன் பிரகாஷ் பதக், ஏ.கே.பாண்டே ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘‘மத்திய அரசு தெளிவாக கூறியும், டெல்லியில் வாடகை வசூலிக்கும் உத்தரவுகள் மீறப்படுகின்றன. கொரோனா பரவும் நிலையிலும் சில வீட்டு உரிமையாளர்கள் மனிதாபிமானமின்றி, வாடகைக்கு இருப்பவர்களை நெருக்கடிக்குள்ளாக்கி வருகின்றனர். எனவே அரசின் உத்தரவை மீறும் அவர்களை தண்டிக்க வேண்டும்’’ என கூறியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘அரசின் உத்தரவை உச்ச நீதிமன்றம் அமல்படுத்த முடியாது. மேலும், இதுதொடர்பான பிரச்னைகளை கையாள ஏற்கனவே அரசு தரப்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் மூலமாக பாதிக்கப்பட்டோர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை நாடலாம்’’ என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

வெளி மாநிலத்தினருக்கு ரேஷன்: விசாரிக்க மறுப்பு:
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வெளிமாநில தொழிலாளர்களுக்கு நாட்டின் எந்த இடத்திலும் ரேஷன் அட்டை இல்லாமல் ரேஷன் பொருட்கள் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டுமென காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு விசாரணைக்கு ஏற்க மறுத்தது. முதலில் இதுதொடர்பாக அரசை அணுகுமாறும் உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து மனுதாரர் தரப்பில் மனு வாபஸ் பெறப்பட்டது. இதேபோல் சில மாநிலங்களில் போலீசாருக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது தொடர்பான வழக்கையும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.



Tags : Landlord , Rent Collection, Homeownership, Dismiss, Supreme Court
× RELATED நிலத்தகராறில் தற்கொலை செய்து கொண்ட...