×

உலகமே வைரஸ் பீதியில் இருக்கும்போது கொரோனாவை கதகளி செய்த கேரளா: அசாத்திய நடவடிக்கையால் முந்தி நிற்கும் முதல் மாநிலம்

புதுடெல்லி: உலகமே கொரோனா பீதியில் உறைந்து நிற்கிறது. ஆனால் கொரோனா ஒழிப்பு பணியில் கேரளா மட்டும் கதகளி ஆடி முடித்து இருக்கிறது. ஒவ்வொரு பணியையும் மிகச்சிறந்த முறையில் யோசித்து செய்து இந்தியாவிலேயே முதல் மாநிலமாக முந்தி நிற்கிறது. சீனாவில் ெதாடங்கிய கொரோனா இன்று உலக இயக்கத்தை நிறுத்தி வைத்து இருக்கிறது. உலக அளவில் 35.50 லட்சம் பேரை பாதித்து, அதில் 2.50 லட்சம் பேர் உயிரை பறித்து இருக்கிறது. இந்தியாவில் 42,533 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பலி மட்டும் 1389. தினம் தினம் அனைவரும் கொரோனா பீதியில் செத்து பிழைக்கிறார்கள்.

ஆனால் இந்தியாவில், ஏன் உலகிலேயே கொரோனா ஒழிப்பு பணியில் கேரளா முன்மாதிரியாக செயல்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டதும் கேரளாவில் தான். 2020ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி முதல் நோயாளி கேரள மாநிலம் திருச்சூரில்தான் உறுதி செய்யப்பட்டார். அன்று தொடங்கியது முதல்வர் பினராய் விஜயனின் நிர்வாக திறன். அவர் எதையும் யோசிக்கவில்லை. யாரிடமும் ஆலோசிக்கவில்லை. உடனடியாக அறிவித்தார், மாநில பேரிடர் என்று. முதல் நோயாளியுடன் தொடர்புடையவர்களாக கணக்கிடப்பட்ட 3 ஆயிரம் பேர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் 45 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அடுத்தடுத்த நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட 3 பேர் குணமடைந்தனர். ஆனால் வுகானில் ஏராளமான கேரளா மாணவர்கள் தவிப்பதை அறிந்த பினராய் சிறப்பு விமானத்தை இயக்கி அத்தனை பேரையும் மீட்டு கொச்சி அழைத்து வந்து மருத்துவக் கல்லூரியில் தனிமைப்படுத்தினார். அவரது நடவடிக்கையால் ஒரு மாணவர் கூட கொரோனா பாதிப்பு இல்லாமல் தப்பினர். மார்ச் 8ல் கொரோனா கேரளாவில் மீண்டும் பரவ ஆரம்பிக்கிறது. உடனடியாக மாநிலம் முழுவதும் உள்ள 21 முக்கிய மருத்துவமனைகளில் 40 படுக்கைகள் தயார் செய்தார். மார்ச் 10ல் அனைத்து கல்லூரி, பள்ளிகளை மூடினார். அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுத்தார். இன்று கொரோனாவை கதகளி செய்து இருக்கிறது கேரளா. இதுவரை 499 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதில் 462 பேர் குணமடைந்துவிட்டனர்.

பலி எண்ணிக்கை 3 மட்டுமே. இந்தியாவிலேயே மிகவும் குறைந்த பலி எண்ணிக்கை, சதவீதம்(0.6) கொண்ட ஒரே மாநிலம் கேரளாதான். காரணம் ஒரே நபர் அவர் முதல்வர் பினராய் விஜயன். அவர் பேசவில்லை, ஆனால் செயலில் காட்டினார்.  கேரளாவில்தான் குறைந்த கொரோனா உயிர்பலியும், அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் குணமடைந்ததும் நடந்துள்ளது. மக்கள் தொகை அடர்த்தி அடிப்படையில் அதிக எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனை நடந்ததும் கேரளாவில்தான். அங்கு கொரோனா சோதனைக்காக 10 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் முதன்முறையாக கொரோனா சோதனைக்காக கயோஸ்க்(விஸ்க்) சோதனையை முதலில் நடத்தியதும் கேரளாதான்.

இந்தியாவில் முதன்முறையாகவும், பல நாடுகளுக்கு முன்பும், கொரோனா சிகிச்சைக்காக பிளாஸ்மா சிகிச்சை முறையை அமல்படுத்தியதும் கேரளாதான். ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனாவிற்காக குறைந்தபட்சம் இரண்டு சிறப்பு மருத்துவமனைகள் கேரளாவில் திறக்கப்பட்டுள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காகவே இந்தியாவில் முதன் முறையாக கேரளாவில்தான் பெருவாரியாக பரவும் தொற்றுநோய் சிறப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.

வெளிநாட்டு  மலையாளிகளுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை:
ஊரடங்கு முடிந்த பிறகு வெளிநாடுகளில் உள்ளவர்கள் பத்திரமாக திரும்பி வருவதற்கு இப்போதே அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து முடித்த முதல் மாநிலமும் கேரளாதான். இதற்காக 2.50 லட்சம் மக்கள் தங்குவதற்கு வசதியாக இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 1.29 லட்சம் படுக்கைகள் கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் தற்போதே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலேயே பெஸ்ட்:
* கொரோனா பாதிப்பு 499
* குணமடைந்தவர்கள் 462
* பலி எண்ணிக்கை 3
* இந்தியாவிலேயே அனைத்திலும் பர்ஸ்ட்
* நாட்டிலேயே முதல் நோயாளி கண்டுபிடிப்பு.
* அதிக கொரோனா பரிசோதனை.
* பிளாஸ்மா சிகிச்சை அறிமுகம்.
*1400 சமுதாய  உணவுக்கூடம்
* 19,902 முகாம்கள் 20 ஆயிரம் கோடி நிதி.
* ஒரு மாத உணவு பொருட்கள்  இலவசம்.
* அங்கன்வாடிகள் மூலம் வீடுகளுக்கு மதிய உணவு.

எல்லாவற்றிலும் முதல் முறையாக....
புலம் பெயர்ந்த மக்களுக்காக தொலைபேசி வழி மருத்துவ சேவை மற்றும் ஆலோசனையை முதன்முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியதும் கேரளாதான். பசி பட்டினியால் மக்கள் தவிக்கக் கூடாது என்பதற்காக நாடு முழுவதும் 1400 சமுதாய உணவுக்கூடங்களை இந்தியாவில் முதன்முறையாக திறந்ததும் கேரளாதான். இந்தியாவிலேயே அதிகமாக குறிப்பாக 19,902 எண்ணிக்கையில் புலம்பெயர்ந்த தொழிலாளர் நலனுக்காக முகாம்களையும், தங்கும் விடுதிகளையும் திறந்தது கேரளாதான்.

போர்க்கால அடிப்படையில் கொரோனா சிகிச்சைப் பணிக்காக இந்தியாவிலேயே முதன் முறையாக 24 மணி நேரத்தில் 300க்கும் மேற்பட்ட டாக்டர்கள் மற்றும் 400க்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர்களை பணி நியமனம் செய்த ஒரே மாநிலம் கேரளாதான். இந்தியாவிலேயே முதன் முறையாக கொரோனா சிகிச்சைக்காக ரூ.20 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கி ஊக்கப்படுத்தியதும் கேரளாதான்.  எந்த ரேஷன்கார்டாக இருந்தாலும் சரி ஒருமாத உணவுப்பொருட்கள் இலவசம் என்ற அறிவிப்பை இந்தியாவிலேயே முதன்முறையாக அறிவித்து செயல்படுத்தியதும் கேரளாதான். தொடர்பை முறிப்போம் என்ற பிரசாரத்தை முன்னெடுத்து இந்தியாவிலேயே முதன் முறையாக கொரோனா ஒழிப்பு பணியில் அடிக்கடி கைகழுவுதல், கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல், சமூக இடைவெளி ஆகியவற்றை அறிமுகம் செய்ததும் கேரளாதான்.

அதோடு விடவில்லை ஜிஓகே டைரக்ட் மற்றும் எஸ்எம்எஸ் சிஸ்டம் என்ற மொபைல் சேவை மூலம் இந்தியாவிலேயே முதன்முறையாக அதிகாரப்பூர்வ கொரோனா தகவல்களையும் வெளியிட்டது கேரளாதான். இந்தியாவிலேயே முதன்முறையாக அங்கன்வாடிகள் மூலம் வீடுகளுக்கு மதிய உணவு சப்ளை செய்த மாநிலமும் கேரளாதான்.
ஊரடங்கு நேரத்தில் இணையதளம் சேவை மூலம் ஒருங்கிணைப்பு பணியை மேற்கொண்டதும் கேரளாதான். கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தினசரி ஆராய்ந்து அதற்கேற்றார்போல் நடவடிக்கை எடுத்த முதல் மாநிலமும் கேரளாதான். முதல்வர், சுகாதாரத்துறை, வருவாய்துறை மற்றும் தலைமை செயலாளர் ஆகியோருக்கு பொது சுகாதார நிலை குறித்து தினமும் விளக்கி கூறி நடவடிக்கை எடுத்த ஒரே மாநிலமும் கேரளாதான்.

இந்தியாவிலேயே சிறந்த சுகாதார சேவை வசதிகள் நிறைந்த மாநிலம் கேரளாதான். ஏனெனில் முதல் 13 இடங்களை கேரளாதான் பிடித்துள்ளது.மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கேன்சர் சிறப்பு மருத்துவ மையங்களை இந்தியாவிலேயே முதன்முறையாக திறந்த மாநிலமும் கேரளாதான். உலக அளவில் வைரஸ் பரவுவது குறித்த அமைப்பில் உறுப்பினராக சேர்ந்த முதல் மாநிலமும் கேரளாதான். இதன் மூலம் உலக அளவிலான வைரஸ் தொற்று குறித்த தகவல்கள் திருவனந்தபுரத்தில் உள்ள வைரஸ் மையத்திற்கு கிடைக்கின்றன.

Tags : Kerala ,world ,state , Corona, Kerala, First State, Curfew, Corona Virus
× RELATED சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு...