×

காய்கறிகளை சாலையில் கொட்டி வியாபாரிகள் திடீர் போராட்டம்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே  ஆரணியில் மொத்த காய்கறி சந்தையில் சமூக இடைவெளி இன்றி பொதுமக்கள் கூடுவதாக கூறி கடந்த மாதம் அதிகாரிகள் சீல் வைத்தனர். ஆரணி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில்  விளையும் கத்தரிக்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, கீரை வகைகள் உள்ளிட்ட காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமலும், உரிய விலை கிடைக்காததாலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. நேற்று காலை ஆரணி அருகே  கண்டிகை பஸ் நிறுத்தம் பகுதியில்  ஏராளமான வியாபாரிகள் கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

இதையறிந்த,  சின்னம்பேடு ஊராட்சியை சேர்ந்த மக்கள் கண்டிகை பஸ் நிறுத்தம் அருகே காய்கறிகள் விற்கக்கூடாது. இப்பகுதி எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட எல்லை. மேலும், நீங்கள் கூட்டமாக காய்கறிகளை விற்றால், கோயம்பேடு போல கொரோனா தொற்று ஏற்படும் என கூறி வியாபாரிகளிடம் கிராம மக்கள்  வாக்குவாதத்தில் ஈடு
பட்டனர். தகவல் அறிந்த காவல் துறையினரும், வருவாய் துறையினரும்  காய்கறிகளை இங்கே விற்காதீர்கள் என்றும்,  மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகளிடமும், மாவட்ட தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடமும் இந்த காய்கறிகளை கொண்டு சென்று விற்றுக்கொள்ளுங்கள்  என்று கூறினர்.

இதை கேட்ட, விவசாயிகள் இந்த காய்கறிகளை அங்கே கொண்டு சென்று விற்பதற்கு போக்குவரத்து செலவு கூட கிடைக்காது என்று கூறி காய்கறிகளை பெரியபாளையம் - புதுவாயல் சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து விரைந்து வந்த பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வியாபாரிகளிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இதன் பின்னர், அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : road ,struggle ,vegetable merchants , Vegetables, Merchants, Struggle, Corona, Curfew
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...