×

மீஞ்சூர், கிண்டி, தரமணியில் இருந்து சொந்த ஊருக்கு படையெடுத்த வட மாநில தொழிலாளர்கள்: போலீசார் தடுத்து நிறுத்தினர்

சென்னை: சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதாக படையெடுத்த வட மாநில தொழிலாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.  ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னையில் வேலையின்றி தவிக்கும் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கடந்த சில நாட்களாக பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், கிண்டியில் தங்கி கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று முன்தினம் மாலை தங்களது சொந்த ஊருக்கு வண்ணாரப்பேட்டை வழியாக நடந்து சென்றனர். அவர்களை வண்ணாரப்பேட்டை மேம்பாலம் அருகே அவர்களை ேபாலீசார் தடுத்தி நிறுத்தி , பஸ் மூலம் அவர்கள் வேலைக்கு செய்த கம்பெனிக்கு அனுப்பி வைத்தனர்.

வேளச்சேரி: ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்த 460க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் தரமணி மகாத்மா காந்தி நகர், எம்ஜிஆர் நகர் பகுதிகளில் தங்கி, வேலை செய்து வந்தனர். இவர்கள், சொந்த ஊருக்கு செல்ல தங்களை அனுமதிக்க வேண்டும், என மாநகராட்சியில் மனு கொடுத்து இருந்தனர். ஆனால், 5 நாட்களாகியும் நடவடிக்கை இல்லாததால், நேற்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே புறப்பட்டனர். அவர்களை  தரமணி பஸ் நிலையம் அருகே அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் வசிக்கும் இடத்துக்கு திரும்பி சென்றனர்.

திருவொற்றியூர்: அத்திப்பட்டு புதுநகரில் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்த ஜார்கண்ட், மேற்கு வங்கம் போன்ற வடமாநிலங்களை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் நேற்று சொந்த ஊருக்கு செல்ல, சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி தண்டவாளம் வழியாக நடைபயணமாக வந்தனர். எர்ணாவூர் மேம்பாலம் அருகே, தண்டவாளத்தில் நடந்து சென்ற 350க்கும் மேற்பட்டோரை எண்ணூர் உதவி ஆணையர் உக்கிரபாண்டியன் தலைமையிலான போலீசார் மடக்கி பிடித்தனர்.அவர்கள் தற்காலிக குடியிருப்புகளில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆர்.ஐ. அலுவலகத்தில் முற்றுகை
மாமல்லபுரம் இசிஆர் சாலை, ஓஎம்ஆர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் தங்கியிருந்து கட்டுமான பணியில் ஈடுபட்டனர்.  இந்நிலையில், நேற்று மாலை மாமல்லபுரம் வருவாய் துறை அலுவலகத்தில் வடமாநிலம் செல்ல பாஸ் வழங்குவதாக தகவல் பரவியதை அடுத்து,  200க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு, தகவலறிந்த  இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், வருவாய் ஆய்வாளர் ஜேம்ஸ் ஆகியோர் ஆன்லைனில் ஆதார் அட்டை விவரத்துடன் விண்ணப்பிக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தினர். அதன்படி விவரங்களை பதிவு செய்துவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : state workers ,hometown ,Kindi ,Dharami ,Meenjur ,Police stop ,Minjur , Minjur, Kindi, Tharamani, Northern State workers, police
× RELATED தென்சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர்...