×

13 நாடுகளில் சிக்கி தவிக்கும் 14,800 இந்தியர்களை மீட்டு வர 64 சிறப்பு விமானங்கள் இயக்கம்: 3 போர்க்கப்பல்களிலும் அழைத்து வர ஏற்பாடு

புதுடெல்லி: பல்வேறு நாடுகளில் சிக்கி தவிக்கும் 14,800 இந்தியர்களை மீட்பதற்காக 64 சிறப்பு விமானங்கள் இயக்கப்படவுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பல ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கின்றனர். மேலும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பலர் சொந்த நாடுகளுக்கு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் விமான சேவைகள் இல்லாததால் அந்தந்த நாடுகளில் சிக்கி அவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், 13 நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் சிக்கியிருக்கும் 14,800 இந்தியர்களை மீட்பதற்காக சிறப்பு விமானங்கள் இயக்கப்படவுள்ளது. ஏர் இந்தியா விமானங்கள் இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது. சுமார் 64 விமானங்கள் இந்தியாவில் இருந்து இயக்கப்படவுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த விமானங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் 200 முதல் 300 வரையிலான பயணிகள் மட்டுமே அழைத்து வரப்படுவார்கள். விமானங்களில் அழைத்து வருவதற்கு முன்பாக பயணிகளுக்கு காய்ச்சல், இருமல், நீரிழிவு நோய் மற்றும் சுவாச பிரச்னைகள் உள்ளதா என்பது குறித்து தெரியப்படுத்துவது அவசியம் எனவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே விமான பயணத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை அழைத்து வரும் நடவடிக்கை நாளை முதல் தொடங்குகிறது. அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து, சவுதி அரேபியா, கத்தார், ஓமன், பக்ரைன் மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்படவுள்ளது. முதல் நாளான நாளை 10 விமானங்கள் மூலமாக 2,300 இந்தியர்கள் அழைத்து வரப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல் 2வது நாளில் 9 நாடுகளில் இருந்து சுமார் 2,050 இந்தியர்கள் சென்னை, கொச்சி, மும்பை, அகமதாபாத், பெங்களூரு மற்றும் டெல்லி உள்ளிட்ட விமான நிலையங்களில் வந்திறங்குவார்கள். ஒரு வாரத்திற்கு இந்த சிறப்பு விமானங்கள் இயக்கப்படவுள்ளது.

இதேபோல மேற்காசியா மற்றும் மாலத்தீவில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் கடற்படைக்கு சொந்தமான 3 போர்க் கப்பல்களும் இயக்கப்படவுள்ளது. ஜலஸ்வா போர்க்கப்பல் சுமார் 1000 பேர் பயணிக்கும் வசதி கொண்டது.  ஆனால், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியம் என்பதால் 500 பயணிகள் மட்டுமே இதில் அழைத்து வரப்படுவார்கள் என கூறப்படுகின்றது. இதேபோல் ஷர்துல் மற்றும் மகர் போர்கப்பல்களும் மீட்பு பணியில் ஈடுபடுகின்றன. சுமார் 300க்கும் மேற்பட்டோர் இந்த கப்பல்களில் அழைத்து வரப்படுவர்.

சென்னை, திருச்சிக்கு 11 சிறப்பு விமானம்
வெளிநாட்டில் இருந்து இந்தியர்களை அழைத்து வரும் விமானங்களில் 11 தமிழ்நாட்டிற்கு இயக்கப்பட உள்ளது. அதில் 7 விமானங்கள் சென்னைக்கும் 4 விமானங்கள் திருச்சிக்கும் இயக்கப்படும். சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து அழைத்துவரப்படும் பயணிகளை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலைய வருகைப் பகுதி சுத்தப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை பார்க்க சந்தித்துப்பேச குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என யாருக்கும் அனுமதி இல்லை.

அவர்கள் விமானத்தை விட்டு இறங்கியதும். சிறப்பு பேருந்துகள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு அழைத்து செல்லப்படுவார்கள் அங்கு 14 நாட்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள். அவர்களுக்கு 2 முறை மருத்துவ பரிசோதனைகள் நடத்தி முடித்து கொரோனா நோய்த்தொற்று எதுவும் இல்லை என்று உறுதிபடுத்திய பின்பே அவர்களுடைய வீடுகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

Tags : countries ,Indians , Indians, special planes, corona, curfew
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...