×

ஆரல்வாய்மொழி சோதனை சாவடி வழியாக சென்னையில் இருந்து 12 மணி நேரத்தில் 148 பேர் வருகை

ஆரல்வாய்மொழி: தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் வைரஸ் பரவும் வேகம் கடந்த சில நாட்களாக மிக அதிகமாக உள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் தங்கி உள்ள கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கார், பைக் என்று வாகனங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர். காட் ஸ்பாட் என்று அறிவிக்கப்பட்டுள்ள தீவிர வைரஸ் பாதிப்பு உள்ள பகுதிகளில் இருந்தும் மக்கள் இங்கு வருகின்றனர்.

இவர்கள் மூலம் தென்மாவட்டங்களில் மீண்டும் வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. ஆகவே சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்துறை அதிகாரிகள் கடும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக குமரி மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழி சோதனைசாவடியில் கூடுதல் போலீசார், சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களும் தீவிர பரிசோதனைக்கு உள்படுத்தப்படுகின்றன. பிற மாவட்டங்களில் இருந்து வருகிறவர்கள் உரிய அனுமதி பெற்றவர்கள் மட்டும் குமரி மாவட்டத்திற்குள் வர அனுமதிக்கப்படுகின்றனர். அனுமதி பெறாமல் வருகிறவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

முறையாக அனுமதி பெற்றிருந்தாலும், சென்னை உள்பட காட்ஸ்பாட் பகுதிகளில் இருந்து வருகிறவர்களுக்கு இங்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்காக இறச்சகுளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு சென்னையில் இருந்து வருகிறவர்கள் அங்கு அனுப்பப்பட்டு அவர்களுக்கு சளி மாதிரி எடுக்கப்படுகிறது. பின்னர் அவர்கள் சொந்த வீடுகளுக்கு சென்று வீட்டில் தனித்திருக்க வேண்டும். 14 நாட்கள் வெளியே சுற்றக்கூடாது. முக கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைக்கின்றனர்.

இந்த நிலையில் ஆரல்வாய்மொழி சோதனைசாவடியில் இருந்து முகாம் அமைக்கப்பட்டுள்ள இறச்சகுளம் வரை சென்று வருவதற்கு அதிக நேரம், பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படுவதால் சிறப்பு முகாம் ஆரல்வாய்மொழி அண்ணா கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளது. நேற்று முதல் இங்கு வெளியூர்களில் இருந்து வருகிறவர்களுக்கு சளிமாதிரி சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் இன்று காலை 7 மணி வரை 12 மணிநேர காலப்பகுதியில் 148 பேருக்கு சளிமாதிரி சேகரிக்கப்பட்டு உள்ளது. ெசன்னையில் இருந்து முறையாக அனுமதி பெற்றவர்கள் மட்டும் 148 பேர் குமரி மாவட்டத்திற்குள் வந்துள்ளனர்.

இவர்கள் வீடுகளில் தனித்திருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நடவடிக்கைகள் சுகாதார பணியாளர்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறப்பு முகாமில் சேகரிக்கப்பட்டுள்ள சளி மாதிரி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆய்வு கூடத்திற்க்கு அனுப்பி வைக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதில் யாருக்காவது பாசிட்டிவ் இருந்தால் உடனடியாக அவர்கள் தனிவார்டில் அனுமதிக்கப்படுவார்கள்.

தீவிர கண்காணிப்பில் காவல்துறை
வெளியூர்களில் இருந்து வருகிறவர்கள் குமரி மாவட்டத்திற்குள் தேசிய நெடுஞ்சாலை மட்டுமல்ல நாற்கர சாைல மற்றும் ஊர்களுக்குள் உள்ள தெருக்கள் வழியாகவும் வந்து விடுகின்றனர். இதை தடுக்கும் வகையில் புதிய நாற்கர சாலையில் பேர்கார்டு வைத்தும், மண் கொட்டியும் தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர். மேலும் ஊர் பகுதிகளில் உள்ள சாலைகளில் பொக்லைன் மூலம் பெரிய பள்ளம் தோண்டியும் தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர். இதனால் எங்கிருந்து வந்தாலும் ேசாதனைசாவடி வழியாகத்தான் மாவட்டத்திற்குள் நுழையமுடியும். இவ்வாறு குமரி மாவட்டத்திற்குள் கொரோனா பரவலை தடுக்க காவல்துறை தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

Tags : Chennai ,Aurya Vaibhavana ,checkpoint , Archives, Checkpoint, Madras
× RELATED தருமபுரி அருகே தொப்பூர் சோதனை சாவடியில் 16 கிலோ தங்கம் பறிமுதல்..!!