×

ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம்: கார்டுதாரர்கள் புகார்

திண்டுக்கல்: ரேஷன் கடையில் தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்படுவதாக திண்டுக்கல் நகர் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் வருவாயின்றி ஏழை, எளிய மக்கள் அவதியடைந்து வருகின்றனர். வருவாயின்றி தவிக்கும் ஏழை, எளியவர்களின் பசியை போக்க ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. தற்போது மே மாதத்துக்கான இலவச மளிகை பொருட்கள் நேற்று முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படுகின்றன. திண்டுக்கல் மாவட்டத்திலும் இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

திண்டுக்கல் நகர் மேற்கு மரியநாதபுரத்தில் உள்ள ரேஷன் கடை எண்26ல் பொதுமக்களுக்கு இலவச மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் வழங்கப்பட்ட அரிசி மிகவும் தரமற்று உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கார்டுதார்கள் இது குறித்து ரேஷன் கடை ஊழியரிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் இதற்கு கடை ஊழியர் முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘ஊரடங்கால் வாழ்வாதாரமின்றி தவித்து வருகிறோம். ரேஷன் அரிசியை வாங்கியாவது குடும்பத்தை நடத்தலாம் என்று நினைத்தால், இப்படி தரமில்லாத அரிசியை விநியோகம் செய்கின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

Tags : ration shops ,Cardholders ,Ration shop , Ration shop, non-standard rice, distribution
× RELATED ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு