×

வேலியே பயிரை மேய்ந்தது; பாதுகாப்பாக வைத்த இடங்களில் ரூ4 கோடி மது பாட்டில் மாயம்: புதுகை அதிகாரிகள் அதிர்ச்சி

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட இடங்களிலும் மதுபாட்டில்கள் கோடிக்கணக்கில் மாயமாகி உள்ளது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி மாலை 6 மணி முதல் ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது. இதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. அன்று மாலை 6 மணி முதல் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளது. 40 நாட்களை கடந்த நிலையில் மது கிடைக்காமல் குடிமகன்கள் அவதிப்பட்டனர். ஆரம்பத்தில் குடிமகன்கள் பாதுகாப்பற்ற இடங்களில் உள்ள கடைகளை உடைத்து திருட துவங்கியதால், அங்கிருந்த பாட்டில்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரனூர், இலுப்பூர், விராலிமலை உள்பட பல்வேறு தாலுகாக்களில் பாதுகாப்பற்ற கடைகளிலிருந்து மதுபாட்டில்கள் பெட்டி பெட்டியாக லாரிகளில் ஏற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில்  வைக்கப்பட்டுள்ளது. இதுபோல் மாவட்டத்தில் 7 இடங்களில் மதுபாட்டில்கள் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் தினமும் மதுவிற்ற பணம் மற்றும் மீதமுள்ள ஸ்டாக் பற்றி அந்தந்த கடை சூபர்வைசர்கள் மாவட்ட அதிகாரிகளிடம் ஒப்படைப்பதுடன் கணக்கு காட்ட வேண்டும். ஊரடங்கு அமலில் வந்த மார்ச் 24ம் தேதி பெரும்பாலான கடைகளில் மது விற்ற கணக்கு இதுவரை கட்டப்படவில்லை என்றும், சரியான இருப்பும் காட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின்னர் இரவு 10 மணி வரை  பெரும்பாலான கடைகளில்  பிளாக்கில் மது விற்பவர்களுக்கு பெட்டி பெட்டியாக மது விற்கப்பட்டுள்ளது.  புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் இவ்வாறு சுமார் ரூ.3 கோடி வரை மது விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதேபோல் பாதுகாப்பாக வைக்கப்பட்ட இடங்களிலும் அதிகாரிகள் துணையுடன் முறைகேடாக மது விற்கப்பட்டுள்ளது. இதுபற்றி டாஸ்மாக் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ஊரடங்கு அமலில் வந்த நாளன்று இரவு வரை பெட்டி பெட்டியாக பிளாக்கில் மது பாட்டில்கள் விற்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதேபோல் பாதுகாப்பாக வைக்கப்பட்ட இடங்களில் ரூ.1 கோடி அளவுக்கு மதுபாட்டில் இருப்பு குறைகிறது. வரும் 7ம் தேதி கடைகளை திறக்க உத்தரவிட்டுள்ளதால், மதுபாட்டில் விவரம் கணக்கெடுத்த போது, இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பு குறைவதற்கான பணத்தை அந்தந்த கடைகளின் சூபர்வைசர்களே கட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். சிறப்பு தணிக்கை குழு அமைத்து மாவட்டம் முழுவதும் உள்ள மதுக்கடைகளில் தணிக்கை செய்தால் பல கோடி முறைகேடு வெளிவருவதுடன், விற்பனையாளர் முதல் அதிகாரிகள் வரை சிக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : places , Security, wine bottle, magic
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்