×

மலேசியாவில் சிக்கியுள்ள 350 இந்தியர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மலேசியாவில் சிக்கியுள்ள 350 இந்தியர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கினால் மலேசியாவில் சிக்கியுள்ள 350 இந்தியர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் ஞானசேகரன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க உலகம் முழுவதும் உள்ள பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன.

இந்தியாவில் வரும் 14ம் தேதிவரை ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் உள்நாட்டு, சர்வதேச விமான சேவைகளும் பல நாடுகளுக்குகிடையே நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து மலேசியாவிற்கு சென்ற 350க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஊரடங்கினால் நீண்ட நாட்களாக அங்கேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுற்றுலா விசாவில் சென்ற பலரின் விசா காலம் முடிவடைந்துவிட்டது. இந்த நெருக்கடியான  நிலையில் தங்களை இந்தியாவிற்கு அனுப்பி வைக்கும்படி மலேசிய தூதரகத்திற்கு மனு அளித்தனர்.

ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.   ஊரடங்கினால் இந்தியா திரும்ப முடியாமல் இருப்பது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக கால தாமதமின்றி உரிய நடவடிக்கை எடுத்து 350 பேரையும் இந்தியா திரும்ப வழிவகை செய்யுமாறு  மத்திய அரசுக்கு உத்தரவிட  வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வழக்கு வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள் மனு மீது மே 11-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க மத்திய மாநில அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


Tags : Indians ,court ,Malaysia ,State Governments ,Malaysians ,Icort ,Central , Malaysians, Indians, Central and State Governments, Icort
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...