×

நாளைக்கு ஒரு வேளை உணவுடன் ஐதராபாத்தில் இருந்து காரைக்குடி நடந்து செல்லும் 3 சிற்ப கலைஞர்கள்: தமிழக எல்லையான கிறிஸ்டியான்பேட்டைக்கு வந்தனர்

வேலூர்: ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவுடன் ஐதராபாத்தில் இருந்து காரைக்குடிக்கு நடந்து சென்ற 3 சிற்ப கலைஞர்கள் தமிழக - ஆந்திர எல்லையான கிறிஸ்டியான்பேட்டைக்கு நேற்று வந்தனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இதனால் வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்ப பலர் நடந்தே வருகின்றனர். இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிமாநிலங்களில் தங்கி வேலை செய்பவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து சொந்த ஊருக்கு செல்ல அனுமதி கேட்டு வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த பெரியகோட்டை பகுதியை சேர்ந்தவர்களான செல்லய்யா(41), சிவலிங்கம்(26), அழகப்பன்(21) ஆகியோர் கடந்த மார்ச் மாதம் ஆந்திர மாநிலம் ஐதராபாத் அருகே தனியார் கம்பெனியில் சிற்ப வேலைக்காக சென்றனர்.

ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக வேலை செய்ய முடியாமல் தவித்த 3 பேருக்கு தனியார் நிறுவனமும் உணவு சரிவர வழங்காமல் இருந்துள்ளது. இதையடுத்து, தனியார் நிறுவன அதிகாரிகள் இனிமேல் எங்களால் உணவு வழங்க முடியாது நீங்கள் சொந்த ஊருக்கு செல்லுமாறு கூறி ₹1,500 வழங்கியதாக தெரிகிறது.  இதைதொடர்ந்து, கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஐதராபாத்தில் இருந்து காரைக்குடியை நோக்கி நடக்க தொடங்கினர். கடந்த 12 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட 3 பேரும், தமிழக - ஆந்திர எல்லையான கிறிஸ்டியான்பேட்டையை நேற்று கடந்தனர். 3 பேரில் ஒருவர் காலில் செருப்பு கூட இல்லாமல் நடந்தே வந்தார். அவருக்கு காட்பாடியில் பைக்கில் சென்ற ஒருவர் தனது செருப்பை கொடுத்து உதவி செய்தார்.  

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘சிற்ப வேலைக்கு சென்ற எங்களுக்கு ஊரடங்கு உத்தரவால் போதிய உணவு கிடைக்காமல் தவித்து வந்தோம், சொந்த ஊருக்கு நடந்து செல்ல முடிவு செய்து, தனியார் நிறுவன அதிகாரிகள் கொடுத்த ₹1,500ஐ வைத்து கொண்டு சொந்த ஊரை நோக்கி நடை பயணம் மேற்கொண்டோம். கையில் இருந்த பணத்தை வைத்து ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு சாப்பிட்டு நடந்து வந்தோம். மொழி தெரியாத மாநிலத்தில் இருந்து சொந்த மாநிலத்திற்கு திரும்பியுள்ளோம். தமிழகத்திற்கு வந்துள்ளதே எங்களுக்கு தைரியமாக உள்ளது. இனி இங்கிருந்து நாங்கள் சொந்த ஊருக்கு விரைவாக செல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றனர்.



Tags : sculptors ,Hyderabad ,Karaikudi ,Kristianpet. 3 , 3 sculptors, walking ,Hyderabad ,Karaikudi ,
× RELATED ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்