×

ஊரடங்கால் எளிய முறையில் திருமணம் ஆதரவற்றோருக்கு விருந்தளித்து மகிழ்ந்த சேலம் புதுமண தம்பதி

சேலம்:சேலத்தில் ஊரடங்கால் எளிய முறையில் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதியர், ஆதரவற்றோருக்கு திருமண விருந்தளித்தனர். தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், வரும் 17ம் தேதி வரை அமலில் நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு காரணமாக சேலத்தில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் தேசிய சேவா சமிதி சார்பில், 15க்கும் மேற்பட்ட இடங்களில் உணவு சமைத்து வழங்கி வருகின்றனர். சேலம் செவ்வாய்பேட்டை வாசவி மஹாலில் நேற்று, ஆதரவற்றோர் மற்றும் ஏழைகளுக்கு தேசிய சேவா சமிதி நிர்வாகிகள் உணவு தயாரித்து கொண்டிருந்தனர்.

அங்கு திடீரென சேலம் வின்சென்ட் பகுதியைச் சேர்ந்த புதுமண தம்பதியான திலக் - நளினி வந்தனர். அவர்கள், ‘‘தங்களது திருமணம் பெற்றோர் முன்னிலையில் எளிய முறையில் நடந்தது. திருமணத்தில் உறவினர்களுக்கு விருந்தோம்பல் நிகழ்ச்சி நடத்த முடியவில்லை. அதனால் தாங்கள் ஆதரவற்றோருக்கு வழங்குகின்ற உணவுக்கான முழு செலவையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என கூறி, செலவுத்தொகையை நிர்வாகிகளான பாஜ மாவட்ட தலைவர் சுரேஷ்பாபுவிடம் கொடுத்தனர். பிறகு புதுமண தம்பதியர், தயாரான உணவை பார்சல் செய்து ஆதரவற்றோர் மற்றும் ஏழை, எளியோருக்கு வழங்க வாகனத்தில் ஏற்றி அனுப்பினர். தொடர்ந்து, டவுன் பகுதியில் சாலையோரம் இருந்த முதியவர்களுக்கு உணவை வழங்கினர். அப்போது, ஏழை, எளியோருக்கும், ஆதரவற்றோருக்கும் திருமண விருந்து அளித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக தம்பதியர் தெரிவித்தனர்.



Tags : Salem ,wedding reception , Curfews ,simple, unmarried, couple
× RELATED சேலத்தில் வெயிலில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் போலீசார் விசாரணை..!!