×

தெற்கு ஆசியாவிலேயே முதன் முறையாக சென்னை கழிவு நீரில் கொரோனாவின் இறந்த செல்கள் கண்டுபிடிப்பு : பரபரப்பு தகவல்!

சென்னை : தெற்கு ஆசியாவிலேயே முதன் முறையாக சென்னையில் கழிவு நீரை பரிசோதித்ததில் கொரோனா வைரசுக்கான இறந்த செல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் நோய் பரவ வாய்ப்பு இல்லை என்று தற்போது தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வரும் நிலையில், சென்னையின் அதன் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனை தடுப்பதற்காக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பக்கமாக, சென்னையிலிருந்து வெளியேறும் கழிவு நீரில் கொரோனா வைரஸ் நோய் தொற்று இருக்கிறதா? அவ்வாறு இருந்தால் எந்த அளவு இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து சென்னையில் உள்ள ராயபுரம், பெருங்குடி, அடையாறு, நெசப்பாக்கம், கோயம்பேடு ஆகிய 5 இடங்களில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து கழிவு நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அதில் கொரோனா வைரஸ் இருக்கிறதா என்பது குறித்து அங்கீகரிக்கப்பட்ட 2 பரிசோதனை கூடங்களில் பகுப்பாய்வு செய்யப்பட்டது.அதன் முதல் கட்ட ஆய்வில், சென்னையில் சேகரிக்கப்பட்ட கழிவுநீர் மாதிரிகளில், கொரோனாவின் இறந்த செல்கள் இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கழிவு நீர் சுத்திகரிப்பு செயல்முறைகளில் பயன்படுத்தப்படும் கிருமி நாசினிகள், கழிவு நீரில் இருக்கும் வைரசை கொன்று விடுவது தற்போது தெரியவந்துள்ளது. சென்னை குடிநீர் வாரியம், உலக சுகாதார அமைப்புடன் கூட்டு சேர்ந்து ஒரு ஆய்வை உருவாக்கி, கழிவு நீர் கண்காணிப்பு மூலம் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்கி உள்ளது. கொரோனா வைரசின் இறந்த செல்கள் வெற்றிகரமாக கழிவு நீரில் கண்டறியப்பட்டது நம் நாட்டில் மட்டும் அல்லாது தெற்கு ஆசியாவிலேயே இது முதன் முறையாகும்.

இந்த ஆய்வின் முக்கிய நோக்கமே, கழிவு நீரில் நோய்த் தொற்றுகள் இருந்தால், அந்த பகுதியில் கொரோனா வைரஸ் பரவுதற்காக காரணங்களை அடையாளம் காண்பதுடன், கிருமி நாசினிகள் தெளிப்பது போன்ற உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் இறங்குவதற்கு இது உதவும். இதனிடையே நெதர்லாந்து உட்பட பல நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், நோய் தணிந்த பிறகும், கழிவுநீரை தொடர்ந்து கண்காணிப்பது மூலம் நோய் தொற்று பரவுகிறதா என்பது குறித்து, கண்காணிக்க இந்த ஆய்வுகள் உதவும் என, சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags : Chennai ,time ,South Asia Discovery ,South Asia , South Asia, Chennai, Waste Water, Corona, Dead, Cells, Discovery
× RELATED கீழடி அகழாய்வை தொடர்ந்து அகரத்தில் மண்பானைகள் அதிகளவு கண்டெடுப்பு