×

தொழில் முக்கியமல்ல; உயிர்தான் முக்கியம்; வரும் 10-ம் தேதி வரை கோயம்பேடு சந்தை செயல்படாது...வியாபாரி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனாவின் கோர தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அனைவருக்கும் உயிர் பயம் என்ற அதிர்ச்சியை அளித்துள்ளது. சென்னை மக்கள் சொந்த ஊருக்கு படையெடுக்கும் அவலம்  ஏற்பட்டுள்ளது. இப்படி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதற்கு, கோயம்பேடு மார்க்கெட் தான் காரணம் என்று அனைவரும் குற்றச்சாட்டு கூறும் நிலை தற்போது  ஏற்பட்டுள்ளது. சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் மட்டும் 7,500 பேர் பணியாற்றுகிறார்கள். கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தினசரி 50 ஆயிரம்  பேர் வந்து செல்கிறார்கள். கொரோனா வைரஸ் குறித்த எச்சரிக்கை எதையும் கண்டு கொள்ளாமல் கோயம்பேடு வியாபாரிகள், பொதுமக்கள் அலட்சியத்துடனே நடந்து கொண்டனர்.

இதற்கிடையே, கோயம்பேடு சந்தையில் சில வியாபாரிகள், அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் சிலருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான் அதிகாரிகள் திடீரென விழித்துக் கொண்டு, பழம் மற்றும் பூ  மார்க்கெட்டை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க தொடங்கினர். பொதுமக்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, கொரோனா உற்பத்தி சந்தையாக மாறிய கோயம்பேடு மார்க்கெட்டை  மூடுவதாக தமிழக அரசு நேற்று அறிவித்தது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் சிலருக்கு தொற்று இருப்பது  கண்டறியப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, கோயம்பேடு சந்தை இன்று (5ம் தேதி) முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது.

பொதுமக்களுக்கு காய்கறிகள் தங்கு தடையின்றி கிடைக்கவும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்கள் மக்களை சென்றடையவும் சென்னை திருமழிசையில் வரும் 7ம் தேதி வியாழக்கிழமை முதல் தற்காலிகமாக காய்கறி  மொத்த விற்பனை அங்காடி செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் திருமழிசை காய்கறி மொத்த விற்பனை அங்காடிக்கு வந்து  காய்கறிகளை வாங்கிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கோயம்பேடு சந்தை திருமழிசைக்கு மாற்றப்பட்டதற்கு காய்கறி வியாபாரிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கோயம்பேட்டில் பேட்டியளித்த அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர்,  திருமழிசையில் அரசு உரிய வசதி செய்து தரவில்லை என்றும் கோயம்பேட்டில் கொரோனா பரவாமல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்திப்பட்டுள்ளது. அரசு தங்களை அழைத்து சென்று திருமழிசையில் ஆய்வு செய்ய வேண்டும். ஒரே நாளில் சந்தையை திருமழிசைக்கு மாற்ற முடியாது.

கோயம்பேடு சந்தை திடீரென திருமழிசைக்கு மாற்றப்படுவதால் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எங்களுக்கு தொழில் முக்கியமல்ல. உயிர்தான் முக்கியம். திருமழிசையில் அடிப்படை வசதிககள் செய்து தர வேண்டும். கோயம்பேடு காய்கறி சந்தையில் மொத்த காய்கறி விற்பனை கிடையாது. வரும் 10-ம் தேதி வரை கோயம்பேடு சந்தை செயல்படாது. மாற்றுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து இன்று ஆலோசனை நடத்தப்படும். அனைத்து வியாரிகள் கூட்டமைப்பினர் இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் கூறினார்.
               


Tags : Coimbatore , Industry is not important; Life is important; The Coimbatore market will not be in operation till the 10th
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...