×

கொரோனா வைரசால் ஊரடங்கு எதிரொலி தற்காலிகமாக சந்திரயான், ககன்யான் திட்டம் நிறுத்தம்: குறைந்த செலவில் வென்டிலேட்டர் தயாரிப்பு பணி தீவிரம்

திருமலை: ஆந்திரா, நெல்லூர் மாவட்டம், சூலூர் பேட்டையில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஏவுதளத்தில் இந்த ஆண்டு 8 பிஎஸ்எல்வி, 2 ஜிஎஸ்எல்வி, எஸ்எஸ்எல்வி ராக்கெட்களை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. கடந்த ஜனவரி 17ம் தேதி பிரெஞ்சு கயானாவில் இருந்து ஜி-சாட் 30 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில் மார்ச் 5ம் தேதி ஜிஎஸ்எல்வி மார்க் 2 ராக்கெட் மூலம் ஜிசாட் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட இருந்த நிலையில் கவுண்டவுன்  தொடங்கிய சில மணி நேரங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.  இந்தநிலையில் மார்ச் மாதத்தில்  2 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட இருந்தது.

ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக அவையும் அப்படியே நிறுத்தப்பட்டது. இதனால் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து அவை அசம்பலி பாயின்ட்டிற்கு  கொண்டுவரப்பட்டு உள்ளது. 4 கட்ட ராக்கெட் தயாரிக்கும் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் சந்திரயான்,  ககன்யான் திட்டமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ராக்கெட் ஏவுவதற்கான பணிகள் நடைபெறக்கூடிய தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவி வரக் கூடிய நிலையில் இந்த பணிகள் அனைத்தும் அப்படியே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இஸ்ரோவில் 30 சதவீதம் ஊழியர்கள் மட்டும் தற்போது பணிக்கு  வருகின்றனர். அவர்களும் செயற்கை கோள்களை கண்காணிப்பதற்காகவும், நிர்வாக ரீதியான பணிகளையும் மட்டுமே செய்து வருகின்றனர்.

சந்திரயான் திட்டம் தோல்வி அடைந்திருந்தாலும் குறைந்த செலவில் ராக்கெட்டுகளை விண்ணில் வெற்றிகரமாக செலுத்துவதால் இஸ்ரோ மீது உலக அளவில் நம்பிக்கை வந்துள்ளது. பல நாடுகளை சேர்ந்த வர்த்தக ரீதியான ராக்கெட்டுகள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட நிலையில்  இந்தாண்டும் வர்த்தக ரீதியான ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இருந்த இந்தியாவை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக எந்த ராக்கெட் சேவையும் இயக்கப்படாததால் இஸ்ரோவிற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் இதனை அதிகாரப்பூர்வமாக இஸ்ரோ அறிவிக்கவில்லை. தற்போதைக்கு  செயற்கைக்கோள் அனுப்புவதை காட்டிலும் குறைந்த செலவில் வென்டிலேட்டர் தயார் செய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : Gagayan Project Shutdown , Corona, Curfew, Chandrayaan, Gagayan Project, Ventilator
× RELATED உத்தரபிரதேசத்தில் 5 முறை எம்எல்ஏவாக...