×

கொரோனா ஊரடங்கால் 40 நாட்களாக தொகுதி மக்களுக்கு மலைப்பாதையில் சுமந்து சென்று பொருட்கள் வழங்கும் பெண் எம்எல்ஏ: தெலங்கானாவில் வியப்பு

திருமலை: கொரோனா ஊரடங்கால் தெலங்கானாவில் கரடு, முரடான மலைப்பாதையில் கடந்த 40 நாட்களாக நடந்து சென்று அத்தியாவசிய பொருட்களை பெண் எம்எல்ஏ தலையில் சுமந்து சென்று வழங்கி வருவது வியப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 40 நாட்களுக்கு மேலாகிறது. இதனால் பல இடங்களில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் காட்டையே தங்களது ஊராக நினைத்து  வரக்கூடிய மலைவாழ் மக்களின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. போதிய உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, தெலங்கானா மாநிலம், ஜெய்சங்கர் மாவட்டத்தில் உள்ள முலுகு தொகுதி, மலைவாழ் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியாகும். இங்கு எம்எல்ஏவாக ஆளுங்கட்சியை சேர்ந்த சீத்தக்கா தனது தொகுதி மக்களுக்கு ஊரடங்கு நேரத்தில் எந்த பாதிப்பும் இருக்கக் கூடாது என்பதற்காக தனது ஆதரவாளர்களுடன் கரடுமுரடான மலைப் பாதைகளில் நடந்து சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார். நகரப்பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களை வழங்கும் சில மக்கள் பிரதிநிதிகள் விளம்பரத்திற்காக அதில் தங்கள் புகைப்படங்களுடன் கூடிய ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேட நினைக்கும் இந்த காலத்தில் எந்தவித விளம்பரமும் இல்லாமல் தனது தொகுதி மக்களுக்காக அவர் கரடுமுரடான வனப்பகுதிக்கு தலையில் சுமந்து சென்று  அத்தியாவசிய பொருட்களை கடந்த 40 நாட்களாக வழங்கிவருகிறார்.

இதில் பல இடங்களில் வாகனங்கள் செல்ல முடியாத கரடுமுரடான கற்கள் கொண்ட  பாதையிலும் இவரது சேவையை தொடர்ந்து செய்து வருகிறார். இதனை கண்டு அப்பகுதி மக்கள் மிகுந்த வியப்படைந்துள்ளனர். சீத்தக்காவின் இந்த மனிதாபிமான நடவடிக்கையை முதல்வர் சந்திரசேகரராவ்  மற்றும் சமூக நல ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.

Tags : Woman MLA ,Telangana ,mountain ,MLA , Corona, Curfew, Volume People, Female MLA, Telangana
× RELATED கடந்த ஆண்டு அத்திவரதரால் களைகட்டியது...