×

வெளிமாநில தொழிலாளர்கள் ரயில் கட்டணத்தை காங்கிரஸ் ஏற்கும்: சோனியா காந்தி அறிவிப்பு

புதுடெல்லி: ஊரடங்கு காரணமாக சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கான ரயில் கட்டணத்தை காங்கிரஸ் கட்சியே ஏற்கும் என்று கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி தொடங்கி தேசிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் சிக்கிய தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்துக்கு திரும்ப முடியாமல் அவதிக்குள்ளாகினார்கள்.
இந்நிலையில், மாநிலங்களின் வேண்டுகோளுக்கிணங்க தொழிலாளர்கள் சொந்த மாநிலங்கள் திரும்புவதற்கு சிறப்பு ரயிலை மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் இந்த ரயில்களில் பயணம் செய்வதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

இதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சோனியாகாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தொழிலாளர்களும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் பொருளாதாரத்தின் முதுகெலும்பு போன்றவர்கள். அவர்களது கடின உழைப்பும் தியாகமும் நமது நாட்டிற்கான அடித்தளமாகும். ஊரடங்கு அமலுக்கு முன் 4 மணி நேரத்துக்கு முன்னதாகத்தான் மத்திய அரசு அதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதனால் ஊழியர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடியவில்லை. 1947ம் ஆண்டுக்கு பின்னர் நாட்டில் இதுபோன்ற சம்பவம் முதல் முறையாக நடக்கிறது. ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல நூறு கிமீ உணவின்றி, மருந்தின்றி, பணமின்றி, போக்குவரத்து வசதி இன்றி நடந்தே செல்லவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். தங்களது குடும்பத்தினருடன் சென்று சேரவேண்டும் என்பதை தவிர வேறு எதையும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

இதுபோன்ற சூழலில் அரசின் பொறுப்பு தான் என்ன? இன்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிக்கித் தவித்து வருகின்றனர்.
அவர்கள் தங்களது சொந்த மாநிலத்தில் உள்ள வீடுகளுக்கு செல்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்களிடம் போதுமான பணமோ அல்லது இலவச போக்குவரத்தோ கிடையாது. ஆனால் இந்த நெருக்கடியான நிலையிலும், தொழிலாளர்களிடம் மத்திய அரசு மற்றும் ரயில்வே நிர்வாகம் ரயில் கட்டணம் வசூலிப்பது கவலைக்குரியதாக உள்ளது. எனவே தேவைப்படும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ரயில் பயணத்துக்கான செலவை காங்கிரஸ் கட்சியே ஏற்பதற்கு முடிவு செய்துள்ளது. எனவே மாநில காங்கிரஸ் கமிட்டியானது ஒவ்வொரு ஏழை தொழிலாளி மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ரயில் பயணத்திற்கான செலவை ஏற்க வேண்டும். இது தொடர்பான நடவடிக்கைகளை கட்சி மேற்கொள்ளும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதேபோல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வௌியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘‘ரயில்வே நிர்வாகம் பிரதமரின் கொரோனா நிதிக்கு 151 கோடியை வழங்கியுள்ளது. ஆனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து செல்வதற்கு கட்டணம் கேட்பது நியாயமற்றது’’ என்று விமர்சித்துள்ளார். இந்நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் செல்வதற்காக ரயில் டிக்கெட் கட்டணத்தில் 85 சதவீதத்தை மானியமாக ரயில்வே தருவதாகவும் 15 சதவீத கட்டணத்தை அந்தந்த மாநில அரசுகள் வழங்குவதாகவும்  மத்திய அரசு ெதரிவித்துள்ளது.Tags : Congress ,Sonia Gandhi , External workers, railway fare, Congress, Sonia Gandhi
× RELATED காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று