×

புரட்டிப்போட்ட பொருளாதார மந்தம், கொரோனா பல லட்சம் பேர் வேலையிழப்பில் தேசிய அளவில் தமிழகம் நம்பர் 1: வேலையின்மை ஆய்வில் அதிர்ச்சி தகவல்

* தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை 49.8 சதவீதம். ஒரே மாதத்தில் 43.5 சதவீதம் உயர்ந்தது.
* தேசிய அளவில் வேலைவாய்ப்பின்மை சராசரி 23.5 சதவீதமாக உள்ளது.
* ஜார்கண்ட், பீகார் மாநிலத்தை விடவும் தமிழகம் மிக மோசமான நிலையில் உள்ளது.

சென்னை: வேலையின்மை தொடர்பாக தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில், தமிழகம் முதல் இடத்தில் உள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  அடுத்த வேளைக்கு என்ன செய்வது என்ற தவிப்பும், பயமும் பெரும்பான்மை மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே பொருளாதார மந்த நிலையால் தொழில்துறைகள் முடங்கி விட்டன. போதாக்குறைக்கு கொரோனாவும் சேர்ந்து கொண்டதால் சிறு தொழில்கள் படுத்து விட்டன. கடந்த மாதம் 25ம் தேதியில் இருந்து நிலவும் ஊரடங்கு 3வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது பலரின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கிவிட்டது. இந்த சூழ்நிலையில்தான், அதிர்ச்சிகரமான புள்ளி விவரம் ஒன்று வெளியாகியுள்ளது.

 இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம், கடந்த ஏப்ரல் மாதத்தில் நிலவிய வேலையின்மை தொடர்பாக தேசிய அளவில் சர்வே எடுத்தது. இதன் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், தமிழ்நாடு, ஜார்கண்ட் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில்தான் வேலையின்மை விகிதம் அதிகமாக உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தில் வேலையின்மை விகிதம் 49.8 சதவீதமாக உள்ளது என இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.  வேலையின்மை விகிதம் கடந்த மார்ச் மாதத்தில் 6.3 சதவீதமாக இருந்தது. அதாவது, ஒரே மாதத்தில் இது 43.5 சதவீதம் உயர்ந்து விட்டது. இந்த விகிதம், ஜார்க்கண்டில் 47.1 சதவீதமாகவும், பீகாரில் 46.6 சதவீதமாகவும் உள்ளது.

 எனினும், ஜார்க்கண்ட், பீகார் மாநிலங்களை விடவும் தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதம் மிக அதிகமாக உள்ளது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி ஊரடங்கு அமலுக்கு வந்த பிறகு, அதிக வேலைவாய்ப்பு வழங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. தங்களின் பொருளாதார தேவைக்காக, விவசாயம் சாராத தொழில்களை நம்பி அதிக தொழிலாளர்கள் இருக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. எனவே, தொழில்துறைகள் மூடப்பட்ட பிறகு வேலை இழப்புகள் அதிகரிப்பதற்கு இது முக்கிய காரணமாக இருக்கலாம். மேலும், ஊரடங்கு ஊரக பகுதிகளை விட நகர பகுதிகளில்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நகரமயமாக்கல் அதிகம் உள்ள மாநிலம் என்பதும் தமிழகத்தில் பிற மாநிலங்களை விட கடந்த மாதம் வேலை இழப்பு அதிகரிக்க காரணமாக இருக்கும் என, எம்ஐடிஎஸ் பேராசிரியர் எம்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

 இதுகுறித்து சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் கூறியதாவது:  ‘தென் மற்றும் வட தமிழக பகுதிகளில் முந்திரி, பீடி மற்றும் தீப்பெட்டி தொழில்சாலையில் பணியாற்றும் பலர் ஊரடங்கால் வேலை இழந்துள்ளனர். ஊரடங்கு முடிந்த பிறகு, வேலை வாய்ப்பு அதிகம் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு அரசு ஆதரவு அளிக்க வேண்டும். ஏற்கெனவே, பொருளாதார மந்த நிலை காரணமாக பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். தற்போது ஊரடங்கு நிலைமையை மேலும் மோசமாக்கி விட்டது.

 கடந்த ஆண்டு ஜூலையில் இருந்து, ஆட்டோமொபைல் துறை நிறுவனங்கள் எதிர்கொண்ட பிரச்னைகளால் அந்த துறையில் பணிபுரிந்த ஏராளமானோர் வேலை இழந்தனர். இதுபோல், ஜவுளித்துறையும் ஊரடங்கிற்கு முன்பே மிக மோசமாக பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்று. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். ஏனெனில், வேலைவாய்ப்புக்கு முன்பாகவே தனியார் துறைகளில் வேலை கிடைப்பது சவாலான ஒன்றாக இருந்தது. இவை அனைத்தும் தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகமாக வழிவகுத்துவிட்டன என்றார்.

Tags : Crisis , Depression, corona, unemployment, nationalism, Tamil Nadu, unemployment
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...