×

சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்களில் மே 17ம் தேதி வரை உணவு இலவசம்: ஆணையர் பிரகாஷ் உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதையடுத்து மே 17ம் தேதி வரை இலவசமாக உணவு வழங்க மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 407 அம்மா உணவகங்கள் உள்ளன. டிபன் மற்றும் கலவை சாதம் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக மார்ச் 24ம் தேதி அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதில் ஓட்டல்களில் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. இதனால் சென்னையில் உள்ள பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டிருந்தன. எனவே, பொதுமக்கள், இளைஞர்கள் என அனைவரும் உணவுக்காக அலைய வேண்டிய நிலை ஏற்ப்பட்டது.

இதையடுத்து சமூக ஆர்வலர்கள் சிலர் தங்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு அம்மா உணவகங்களில் மொத்தமாக பணத்தை செலுத்தி உணவு வழங்கி வந்தனர். இதனால் அம்மா உணவகங்கள் மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இதனால் அம்மா உணவகங்களில் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது கொண்டே இருந்தது.
இதனையடுத்து தமிழக அரசு சார்பில் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து நேற்று முன்தினம் வரை இலவசமாக உணவு வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முதல் ஊரடங்கு விதிகளில் தளர்வு செய்யப்பட்டதால் அம்மா உணவகங்களில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று நேற்று காலை அறிவிக்கப்பட்டது. இதனால் காலையில் வழக்கம் போல் அம்மா உணவகங்களுக்கு சாப்பிட வந்தவர்களிடம் அம்மா உணவக ஊழியர்கள் பணம் கேட்டுள்ளனர்.

கடந்த 13 நாட்களாக இலவசமாக சாப்பிட்டு வந்த நிலையில் திடீரென்று பணம் கேட்டதையடுத்து சாப்பிட வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் பணம் எடுத்து வராதவர்கள் சாப்பிடாமல் அங்கிருந்து புலம்பியபடியே சென்றனர். ஆனால் ஒரு சிலர் பணத்தை கொடுத்து சாப்பிட்டு சென்றனர். இதனால் வழக்கம் போல் விற்பனையாகும் இட்லியை விட குறைவாகவே விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதையடுத்து வரும் 17ம் தேதி வரை அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி அனைத்து அம்மா உணவகங்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டு மறுபடியும் நேற்று மதியம் முதல் இலவசமாக உணவு வழங்கப்பட்டது. மேலும் கடந்த மார்ச் 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் 19 லட்சம் பேர் இலவசமாக உணவு உட்ெகாண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Prakash ,Mother Restaurants ,Chennai , Chennai Municipality, Mother Restaurants, Food Free, Commissioner Prakash
× RELATED பெரியகுளம் அருகே நாட்டு வெடிகுண்டு,...