×

கொரோனா பாதித்த பெரியவர் சிகிச்சைக்கு நாளொன்றுக்கு 1 லட்ச ரூபாய் வசூலித்த மருத்துவமனை

* 16 லட்சம் வரை செலுத்தியும் பலனின்றி இறந்தார்
* ஆம்புலன்சுக்கும் 8,000 பில் போட்ட கொடுமை

மும்பை: மும்பையில் தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட தந்தை பலியானதோடு 16 நாள் சிகிச்சைக்கு 16 லட்சம் வசூலித்ததாக மருத்துவமனை மீது ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சாண்டா கிராஸ் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது 74 வயதான தந்தையை மார்ச் 31ம் தேதி தனியார் மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு காரணமாக அனுமதித்துள்ளார். 15 நாள் ஐசியூ பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 15ம் தேதி அவர் உயிரிழந்தார். இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் 16 லட்சம் தொகையை மருத்துவ கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

இதனால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவரால் ஒரு நாளைக்கு 1 லட்சம் மருத்துவமனை கட்டணமாக செலுத்துவது என்பது மிகவும் கடினமாகும் என்று கூறியுள்ளார். கொரோனா பாதித்தவர்கள் மற்றும் கொரோனா பாதிக்காத நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது கூடுதல் கட்டணங்களை வசூலிக்ககூடாது, என பொது சுகாதார துறை கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டு இருந்தது. உயிரிழந்தவரின் மகன் கூறியதாவது:மருந்து மற்றும் அவருக்கான மருத்துவ பொருட்களுக்காக ₹8.6 லட்சம், கொரோனா சிகிச்சை கட்டணம் ₹2.68 லட்சம் வசூலிக்கப்பட்டது. எனது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது எங்களது மொத்த குடும்பமும் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தது.

மருத்துவமனை நிர்வாகத்தோடு இமெயில் மற்றும் போன் மூலமாக தான் தொடர்பில் இருந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 2 நாளில் அவரது சிறுநீரக செயல்பாடு அசாதாரணமாக உள்ளதாக தெரியவந்ததை அடுத்து கட்டணம் அதிகரித்தது. நான் 3.4 லட்சம் செலுத்தினேன். அடுத்த 2 நாட்களில் பணம் செலுத்தவில்லையென்றால் சிகிச்சை நிறுத்தப்படும். தந்தையின் உடலை ஆம்புலன்சில் எடுத்துவருவதற்கு கூட 8 ஆயிரம் கட்டணத்தை மருத்துவமனை நிர்வாகம் வசூலித்தது
என்றார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் இயக்குனர் மேன்பீரீத் சோகல் கூறுகையில், ‘‘ஜூகு என்ற நோயாளி கடந்த 15ம் தேதி மிகவும் மோசமான நோய்களோடு, பல்வேறு உறுப்புக்கள் செயலிழந்த நிலையில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஏற்கனவே அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் அவருக்கு சுவாச பிரச்னை ஏற்பட்டது. சிறுநீரக செயலிழப்புக்கான சிகிச்சை தொடர்ந்து 7 நாட்கள் அளிக்கப்பட்டது. சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டபோதிலும் அவர் உயிரிழந்தார். முக்கிய மருத்துவ சேவைகள் வழங்கும் எந்த ஒரு மருத்துவமனையிலும் இதுபோன்ற நோயாளிக்கான சராசரி மருத்துவ கட்டணம் ஒரு நாளைக்கு 1லட்சமாகும். மருத்துவ சேவைகள் மற்றும் தரமான சிகிச்சைகளின் அடிப்படையில் இந்த கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றது” என்றார்.



Tags : adult ,hospital ,coroner , Corona, Adult Treatment, Hospital
× RELATED டெல்லி மருத்துவமனை தீ விபத்தில் 7...