×

40 நாள் ஊரடங்கு நேற்று முதல் படிப்படியாக தளர்வு தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்புகிறது: பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டாலும் கலெக்டர்கள், போலீசார் அறிவிப்பால் குழப்பம்

சென்னை: தமிழகத்தில் கடந்த 40 நாட்களாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நேற்று முதல் படிப்படியாக தளர்த்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்தார். இதன்மூலம் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட அனைத்து நகர் பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் இயல்பு நிலை விரைவில் திரும்பும் என்று மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர். ஆனாலும், மாவட்ட கலெக்டர்கள், போலீசார் கடைகளை மீண்டும் அடைக்க சொன்னதால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதியில் இருந்து மே 3ம் தேதி (நேற்று முன்தினம்) வரை ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக, அனைவரும் வீட்டிலேயே முடங்கினர். அத்தியாவசிய பணிகளை தவிர மற்ற பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பஸ், ரயில், விமான சேவைகள், பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் இழுத்து மூடப்பட்டது. இதனால் பொதுமக்களின் பொருளாதார நிலை மிகவும் மோசமானது. தினசரி கூலி வேலை செய்து சாப்பிடுபவர்கள், ஒருநாள் உணவுக்கே மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.   இந்த நிலையில், மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் இரண்டு வாரத்துக்கு அதாவது மே 17ம் தேதி வரை நீட்டித்து கடந்த வாரம் அறிவித்தது. இதையடுத்து, கடந்த 2ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பிறகு எடப்பாடி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் 4ம் தேதியில் (நேற்று) இருந்து மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், கொரோனா வைரஸ் குறைவாக உள்ள பகுதிகளில் அதாவது தடை செய்யப்பட்ட பகுதிகள் என்று அறிவிக்காத மற்ற பகுதிகளில் தனி கடைகள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள், கட்டுமான பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அத்தியாவசிய கடைகள் காலை 6 மணியில் இருந்து மாலை 5 மணி வரை செயல்படலாம் என்றும், மற்ற கடைகள் காலை 11 மணியில் இருந்து மாலை 5 மணி வரை திறக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று காலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் கடைகள் திறக்கப்பட்டது. காலையில் அத்தியாவசிய கடைகளும், காலை 11 மணி முதல், அனைத்து தனி கடைகள் (முடி திருத்தகங்கள், அழகு நிலையங்கள் தவிர) ஹார்டுவேர், சிமென்ட், கட்டுமான பொருட்கள், சானிடரிவேர், எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் கடை, மொபைல் போன், கம்யூட்டர், வீட்டு உபயோக பொருட்கள், மின் மோட்டார், கண் கண்ணாடி கடைகள் திறக்கப்பட்டது.

ஏசி வசதி இல்லாத ஜவுளிக்கடைகள், நகை கடைகளும் திறக்கப்பட்டன. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டன. அதேபோன்று ஐடி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் குறைந்த ஊழியர்களுடன் செயல்பட தொடங்கின. ஆனாலும், திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட சில நகர் பகுதிகளில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கடைகளை திறக்க அனுமதிக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். சென்னையில் மயிலாப்பூர் உள்ளிட்ட சில இடங்களில், முதல்வர் அறிவிப்பின்படி திறக்கப்பட்ட கடைகளை போலீசார் அதிகாரிகள் நேற்று மதியம் மூட சொல்லி கட்டாயப்படுத்தினர். எதற்காக இந்த முரண்பட்ட அறிவிப்பு என்று அரசு சார்பிலோ, போலீஸ் தரப்பிலோ தெரிவிக்கப்படவில்லை. இதனால் கடை உரிமையாளர்கள் குழப்பம் அடைந்தனர்.

ஆனாலும், அனைத்து சாலைகளிலும் மக்கள் அதிகளவில் இரண்டு மற்றும் 4 சக்கர வாகனங்களில் பயணம் செய்தனர். இது, கொரோனா ஊரடங்குக்கு முன் உள்ள இயல்பு வாழ்க்கையை நினைவுபடுத்தியது.  தமிழகம் முழுவதும் கடந்த 40 நாட்களுக்குப் பிறகு கடைகள் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். காலை 6 மணியில் இருந்து சென்னை, கோவை, மதுரை, சேலம், நெல்லை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட நகர் பகுதிகளில் உள்ள பல சாலைகளில் வழக்கத்தை விட இன்று அதிக மக்கள் நடமாட்டம் காணப்பட்டது.  கடந்த 40 நாட்களாக சென்னை முழுவதும் அனைத்து சாலைகளிலும் இரும்பு பேரிகாட் போட்டு சாலைகளில் தடுப்பு ஏற்படுத்தி போலீசார் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், நேற்று காலை சாலைகளில் உள்ள தடுப்புகள் அகற்றப்பட்டு இருந்தது. அதிக அளவில் போலீசாரும் இல்லை.

40 நாட்களுக்கு பிறகு சிக்னல்
போலீசார் சாலைகளில் உள்ள தடுப்புகளை அகற்றி, நேற்று காலை 7 மணி முதல் முக்கிய சாலை சந்திப்புகளில் உள்ள சிக்னல்களை எரிய விட்டனர். 40 நாட்களுக்கு பிறகு சிக்னல் வேலை செய்தது சென்னை மக்களுக்கு புதிய அனுபவமாகவே இருந்தது.

செல்போன் கடைகளில் கூட்டம்
40 நாட்கள் ஊரடங்குக்கு பிறகு நேற்று எலக்ட்ரிக்கல் மற்றும் செல்போன் கடைகள் திறந்திருந்ததால், காலை முதலே மக்கள் செல்போன் கடைகளுக்கு படையெடுத்தனர். குறிப்பாக, செல்போன் ரிப்பேர் செய்யும் கடைகளில் கூட்டம் அதிகளவில் இருந்தது.


Tags : announcement ,stores ,collectors ,police announcement , Curfew, Corona, Chennai, Tamil Nadu, Curfew
× RELATED நீலகிரி, மலப்புரத்தில் போதைப்பொருள் கடத்தல்,மது விற்பனை குறித்து ஆலோசனை