×

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடை உத்தரவால் பதநீர் விற்பனை பாதிப்பு: தொழிலாளர்கள் தவிப்பு

களக்காடு: கொரோனா தடை உத்தரவால் மருத்துவ குணங்கள் நிறைந்த பதநீர் விற்பனை பாதிப்பு அடைந்துள்ளதால் பனை தொழிலாளர்கள் தவிப்பு அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காடு, சிதம்பரபுரம், சாலைப்புதூர், மாவடி, மலையடிபுதூர், திருக்குறுங்குடி, ராஜபுதூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. இந்த பனை மரங்களில் இருந்து பதநீர் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் அதிகாலையில் பனை மரங்களில் ஏறி பதநீர் இறக்குகின்றனர். பொதுவாக கோடை காலங்களில் வெப்பத்தை தணிக்கும் இயற்கை பானமான பதநீரை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி அருந்துவர்.

இயற்கை நமக்கு அளித்த நன்கொடையான பதநீரில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. கோடை கால நோய்களை தடுக்கும் வல்லமை மிக்கது பதநீர் ஆகும். மஞ்சள்காமாலை, அம்மை போன்ற நோய்களுக்கு ஏற்ற இயற்கை பானமான பதநீர் மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ரசாயனங்கள் அடங்கிய செயற்கை குளிர்பானங்களை அருந்துவதை விட இயற்கையாக கிடைக்கும் பதநீரை பனை ஓலை பட்டைகளில் அருந்துவது சுவைமிக்கது மட்டுமல்ல, நமது உடலுக்கும் நல்லது என்கின்றனர் பொதுமக்கள். இந்தாண்டும் பனை தொழிலாளர்கள் பதநீர் இறக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் கொரோனா தடை உத்தரவு காரணமாக பதநீர் விற்பனை பாதிப்பு அடைந்துள்ளது. ஒரு சிலர் மட்டுமே பதநீர் இறக்கும் இடங்களுக்கு சென்று பதநீர் வாங்கி அருந்துகின்றனர். ஒரு லிட்டர் ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்பு வியாபாரிகள் தொழிலாளர்களிடம் பதநீரை கொள்முதல் செய்து ஊர் பகுதிகளில் வீடு, வீடாக விற்பனையில் ஈடுபடுவர். தற்போது தடை உத்தரவு அமலில் இருப்பதால் வியாபாரிகள் பதநீர் விற்பனை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே பனை ஏறும் தொழில் அழிவை நோக்கி செல்வது வருந்தத்தக்கது. இந்நிலையில் இந்தாண்டு பதநீர் விற்பனை மந்தமாக இருப்பதால் தொழிலாளர்கள் தவிப்பு அடைந்துள்ளனர்.

எனவே பனை ஏறும் தொழிலாளர்களுக்கு அரசு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்றும், தடை உத்தரவு அமலில் இருந்தாலும் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதுபோல பதநீர் விற்பனை செய்யவும் அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : paddy district ,Paddy , Paddy, corona ban, canal sales, impact
× RELATED அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை...