குடியாத்தம் அருகே விவசாயிகள் வேதனை; 20 யானைகள் அட்டகாசம்: 25 ஏக்கர் மாமரங்கள் சேதம்

குடியாத்தம்: குடியாத்தம் அருகே விவசாய நிலத்தில் புகுந்த 20க்கும் மேற்பட்ட யானைகள் 25 ஏக்கரில் இருந்த மாமரங்களை சேதப்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் வனப்பகுதி அருகில் உள்ள கொட்டமிட்டா, தனகொண்டபல்லி, சைனகுண்டா, ஜிட்டப்பல்லி, மோர்தானா உள்ளிட்ட கிராமங்களில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து மாமரங்கள், வாழை உள்ளிட்ட விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனை விரட்டியடிக்கும் பணியில் குடியாத்தம் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு குடியாத்தம் அடுத்த கொட்டமிட்டா கிராமத்தில் புகுந்த 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், அங்கிருந்த பாபு, ராஜகோபால்,  வசந்தம்மாள், லட்சுமணகுமார், சுரேந்தர், பத்மநாபன், வெங்கடகிருஷ்ணன் ஆகியோருக்கு சொந்தமான சுமார் 25 ஏக்கர் பரப்பளவு உள்ள மாந்தோப்புகளில் புகுந்து மாமரக்கிளைகளை முறித்து சேதப்படுத்தியது. இதில் 200க்கும் மேற்பட்ட மாமரங்கள் சேதமானது. மேலும், ₹3 லட்சம் மாங்காய்களையும் தின்றுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

தகவலறிந்த வனத்துறையினர் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணிவரை யானைகளை விரட்டியடிக்கும் பணியில் ஈடுபட்டனர். எனவே, யானைகளால் சேதமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும்,  யானைகளை நிரந்தரமாக விரட்டியடிக்க மலையோர பகுதிகளில் மின்வேலிகள் அமைக்கவேண்டும், யானைகள் நடமாட்டத்தை தடுக்க பள்ளம் ஏற்படுத்தவேண்டும், கும்கி யானைகளை வரவழைத்து யானைகளை விரட்ட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>