×

புதுச்சேரி நேரு வீதியில் கடைகளை மூடச்சொல்லி போலீஸ் கெடுபிடி: வியாபாரிகள் கொந்தளிப்பு- பரபரப்பு

புதுச்சேரி: புதுச்சேரி  நேரு வீதியில் கடைகளை மூடச்சொல்லி போலீஸ் திடீரென கெடுபிடி செய்தனர். முதல்வரின் உத்தரவை மீறி அதிகாரிகள் செயல்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். புதுவையில் அனைத்து கடைகளையும் திறக்கலாம் என முதல்வர் அறிவித்த நிலையில், நேருவீதி மற்றும் அதை ஒட்டிய முக்கிய கடை வீதிகளில் வியாபாரிகள் காலை 9 மணிக்கு வந்து தங்களது கடைகளை திறந்து தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பெரியகடை போலீசார், மாவட்ட நிர்வாகம் உத்தரவின்பேரில் அவற்றை அடைக்குமாறு நிர்ப்பந்தம் செய்தனர்.

இதையடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிய வியாபாரிகள் சிறிது நேரத்திற்கு பின் கடைகளை அடைத்து விட்டு வெளியே காத்திருந்தனர். இதேபோல் கொசக்கடை, பாரதி வீதி, காந்தி வீதி அதை ஒட்டியுள்ள வீதிகளிலும் திறந்திருந்த கடைகளை அடைக்கச் சொல்லி போலீசார் கெடுபிடி காட்டினர்.  இதுபற்றி போலீஸ் வட்டாரத்தில் கேட்டபோது, மேலிட உத்தரவின்பேரில் நாங்கள் செயல்படுகிறோம். வேறு எதுவும் எங்களால் சொல்ல முடியாது என்றார். அந்த மேலிட உத்தரவு எங்கிருந்து வந்தது? என்பது மர்மமாக உள்ளது. இவ்விவகாரத்தில் முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்து போலீஸ் கெடுபிடியை தடுக்க வேண்டுமென வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை வலுத்துள்ளது.

இதனிடையே பைக்கில் 2 பேர் செல்லலாம் என முதல்வர் நேற்று அறிவித்த நிலையில், 2 பேர் சென்றால் அவர்களை நிறுத்தி அபராதம் வசூலிக்க காவல்துறை தலைமை அதிகாரி ஒருவரிடமிருந்து உத்தரவு வெளியாகி அதற்கான நடவடிக்கையில் போலீஸ் தீவிரமாக இறங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.  முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மீறி செயல்பட அரசு அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளதா? என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர். வியாபாரிகளும் கொரோனா நோய் வந்து தாங்கள் இறந்தாலும் பரவாயில்லை, முதல்வரின் உத்தரவுபடியே நாங்கள் கடையை திறக்க வந்துள்ளோம்.

அப்படியென்றால் முதல்வரின் உத்தரவுக்கு புதுச்சேரியில் மதிப்பு இல்லையா? என்ற கொந்தளித்தனர். கடைகளை திறக்க முடியாமல் நேருவீதியில் திரண்ட வியாபாரிகள், முதல்வரிடம் முறையிட்டபின் அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றனர். அதன் பின்னர் இவ்விவகாரம் முதல்வர் நாராயணசாமியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரது தலையீட்டின்பேரில் கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டது. பின்னர் வியாபாரிகள் ஒவ்வொருவராக கடைகளை திறந்தனர்.

Tags : shops ,Merchants ,Puducherry Nehru Road ,Puducherry ,Shop ,Kedupidi , Puducherry, Nehru Road, Shop, Police, Kedupidi
× RELATED தனியார் கட்டடங்களிலும் இயங்கும்...