×

கோயம்பேடு சந்தை நாளை முதல் தற்காலிகமாக மூடல்: வரும் 7-ம் தேதி முதல் திருமழிசையில் செயல்படும் என அறிவிப்பு

சென்னை: கொரோனா  வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு அமலில் இருந்தாலும், கோயம்பேடு சந்தையில் எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சமூக இடைவெளியை ஒருவரும் கடைபிடிக்கவில்லை. சந்தையில் வியாபாரிகள், தொழிலாளர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்று வேகமாக பரவியது.  இதைத் தொடர்ந்து, கோயம்பேடு சந்தையை வேறுஇடத்துக்கு மாற்ற அரசு அறிவுறுத்தியது. இதன்படி, கோயம்பேடு பூ மற்றும் பழ சந்தை மாதவரத்திற்கு மாற்றப்பட்டது. சென்னை மட்டுமல்ல, கோயம்பேட்டுக்கு லோடு இறக்கவும், ஏற்றவும் சென்று வந்த மற்ற மாவட்ட லாரி டிரைவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

அதனால் பல்வேறு மாவட்டங்களில் உள்ள லாரி டிரைவர்களின் ரத்த, சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு அவை சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. கோயம்பேடு பணியில் இருந்த ஐபிஎஸ் அதிகாரிக்கு இன்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடன் இருந்த போலீசார் டிரைவருக்கும் சோதனை நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையும் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக்குழு வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது; கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் சிலருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, கோயம்பேடு சந்தை நாளை முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது. பொதுமக்களுக்கு காய்கறிகள் தங்கு தடையின்றி கிடைக்கவும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்கள் மக்களை சென்றடையவும் சென்னை திருமழிசையில் வருகின்ற வியாழக் கிழமை முதல் தற்காலிகமாக காய்கறி மொத்த விற்பனை அங்காடி செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் திருமழிசை காய்கறி மொத்த விற்பனை அங்காடிக்கு வந்து காய்கறிகளை வாங்கி கொள்ளலாம். பொதுமக்களின் பாதுகாப்புக்கு மேற்கொள்ளப்படும் மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tags : Coimbatore ,Coimbatore Market , Coimbatore Market, Closure, Thirumaisai
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...