×

அதிரும் தமிழகம்; ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 3,550 -ஆக உயர்வு; சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் மேலும் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,550- ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,836-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் இதுவரை 11,762 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 1,389 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,409 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 30 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 31-ஆக உயர்ந்துள்ளது.

* தமிழகத்தில் இதுவரை 1,53,489 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று மட்டும் 12,773 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 50 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 1,611 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* சென்னையில் மக்கள்தொகை அதிகம் என்பதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது.

* தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு இதுவரை மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

* இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 2,392 ஆண்கள், 1,157 பெண்கள், 1 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் ஆரஞ்சு மண்டலங்களின் எண்ணிக்கை குறைந்து சிவப்பு மண்டலங்களாக மாறி வருகிறது.

* அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

* பாதுகாப்பு வளையத்திற்குள் தான் தமிழகம் உள்ளது.

Tags : Corona , Tamil Nadu, Corona, Health Department
× RELATED KP.2 என்ற புதிய வகை கொரோனாவால்...