×

நெடுஞ்சாலைத் துறை டெண்டர்கள் குறித்து சிபிஐ விசாரணை எதிர்கொள்ள அதிமுக அரசு தயாரா? : துரைமுருகன் சவால்

சென்னை : நெடுஞ்சாலைத் துறை டெண்டர்கள் குறித்து சிபிஐ விசாரணை எதிர்கொள்ள அதிமுக அரசு தயாரா என்று எதிர்க்கட்சித் துணை தலைவர் துரைமுருகன் சவால் விடுத்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு நேரத்தில் ஏன் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விடுவதற்கு அவசரம் காட்டி, அதே ஊரடங்கு காலத்திலேயே ஆன்லைனில் டெண்டர் தாக்கல் செய்யத் தேதியையும் நிர்ணயித்தீர்கள் என்று முதல்வரும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் கேள்வி கேட்டால், அமைச்சர் ஜெயக்குமார் சம்மன் இல்லாமல் ஆஜராகி பதில் என்ற போர்வையில் உளறல்கள் நிரம்பிய ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக ஆட்சியில் டெண்டர்களின் மதிப்பீடுகள் தயாரிக்கும் லட்சணமும் ஆன்லைன் டெண்டர்களில் நடப்பதும் அனைவருக்கும் தெரிந்ததுதான். ஊரே சிரிப்பதுதான்!டெண்டர் குறித்துப் பல வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்து அதிமுக ஆட்சியின் டெண்டர் முறைகேடுகளைப் பார்த்து நல்லோர் அனைவரும் கைகொட்டிச் சிரித்துள்ளார்கள். கமிஷன் - கரெப்ஷன் - கலெக்‌ஷன் என்ற ஊழல் தந்திரத்தின் அடிப்படையில் இயங்கும் அதிமுக ஆட்சிக்கும் அதில் அமைச்சராக உள்ள ஜெயக்குமாருக்கும் நல்லாட்சி தந்த திமுக பற்றி பேசுவதற்கோ அல்லது அப்பழுக்கற்ற பொதுவாழ்வினை தனது அசையாச் சொத்தாக வைத்திருக்கும் திமுக தலைவர் பற்றிக் குறை கூறுவதற்கோ சிறிது கூட தகுதி இல்லை!

தனது துறை ஊழல் குற்றச்சாட்டில் தன் உறவினர்களுக்கு ஒப்பந்தம் கொடுத்து உயர் நீதிமன்றமே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது அதிமுக ஆட்சியில்தான்!அண்ணன் தம்பி அத்தனை பேருக்கும் கான்டிராக்ட் கொடுக்கும் சிண்டிகேட் அமைத்துள்ள உள்ளாட்சித் துறை அமைச்சர் இருப்பது இந்த ஆட்சியில்தான்! இந்தியாவிலேயே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட ஒரே முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்!ஏன், ஊழல் வழக்கு நிரூபிக்கப்பட்டு, சிறைத் தண்டனை பெற்ற முதல்வரைக் கொண்ட ஒரே ஆட்சியும் அதிமுக ஆட்சிதான்! இப்போதைய அதிமுக ஆட்சியும் ஊழலும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்பதை அமைச்சர் ஜெயக்குமார் நினைவில் கொண்டு நாவடக்கத்துடன் பேட்டி கொடுப்பதும் கை அடக்கத்துடன் அறிக்கை எழுதுவதும் நல்லது என்று எச்சரிக்க விரும்புகிறேன் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Tags : government ,CBI ,AIADMK ,The Duraimurugan Challenge , Highways Department, Tenders, CBI, Investigation, AIADMK Government, Durairamurgan, Challenge
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...