×

கொரோனா பரவிவரும் நிலையில் சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளால் அபாயம் : இடைப்பாடியில் மக்கள் பீதி

இடைப்பாடி:  தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இடைப்பாடியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனைகளின் மருத்துவ கழிவுகளை சாலையோரம் கொட்டியுள்ளதால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.தமிழகம் முழுவதுமாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பெரிய அளவிலான மருத்துவமனைகள் கொரோனா மருத்துவமனையாகவும், சிறிய அளவிலான மருத்துவமனைகள் சளி, காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறி இல்லாதவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் சிகிச்சைகளை அளித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவி வருவதால் மருத்துவமனை கழிவுகளை கையாள்வதில், அதிகாரிகள் அதிக அக்கறை காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், சேலம் மாவட்டம் இடைப்பாடி - பூலாம்பட்டி சாலையில் உள்ள சின்னமுத்தூர் ஐயனாரப்பன் கோயில் அருகே, பாலத்தின் அருகில் தனியார் மருத்துவமனைகளின் மருத்துவ கழிவுகளை பெட்டி பெட்டியாக கொண்டு வந்து கொட்டிச்சென்றுள்ளனர். கையுறைகள், முககவசம், ஊசி, மருந்து மற்றும் குளுக்கோஸ் பாட்டில்கள், உடைகள் ஆகியவற்றையும் கொண்டு வந்து போட்டுச்சென்றுள்ளனர். ஊரடங்கால் உணவின்றி திரியும் தெரு நாய்கள், இந்த மருத்துவ கழிவுகள் பெட்டியை சிதைத்துள்ளது. இதனால் இவை பல இடங்களில் சிதறி கிடக்கிறது. நேற்று காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள், சாலையோரம் மருத்துவமனை கழிவுகள் பெட்டி பெட்டியாக கொட்டப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் வைரஸ் பரவ வாய்ப்புள்ளது எனவும், இதுபோன்ற செயலில் ஈடுபட்ட தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், அங்குள்ள கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Roads , Roads dotted ,corona spreading, incessantly
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள்...