×

கட்டுமான பணிகளுக்கு அனுமதியால் செங்கல் சூளைகள், ஹாலோ பிரிக்ஸ் தொழில்கள் இயங்க தொடங்கின: தொழிலாளர்கள் நிம்மதி பெருமூச்சு

வேலூர்: வரும் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ள நிலையில் வேலூர் மாவட்டத்தில் செங்கல் சூளைகளும், ஹாலோ பிரிக்ஸ் தொழிலகங்களும் இயங்க தொடங்கியுள்ளன.வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் செங்கற்கள், ஹாலோ பிரிக்ஸ் கற்கள் உற்பத்தி அதிகம். இம்மாவட்டங்களில் சோளிங்கர், காவேரிப்பாக்கம், திமிரி, ஆற்காடு, வாலாஜா, கணியம்பாடி, காட்பாடி, கே.வி.குப்பம், அணைக்கட்டு, வேலூர், மாதனூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, கந்திலி ஒன்றியங்களில் இயங்கி வருகின்றன. இங்கிருந்து உற்பத்தி செய்யப்படும் செங்கற்கள் உள்ளூர் தேவை போக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கும், ஓசூர் நகருக்கும், கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த மூன்று மாவட்டங்களில் மாதம் ஒன்றுக்கு ஏறத்தாழ 50 லட்சம் செங்கற்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றை நம்பி 20 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இவை போக ஹாலோ பிரிக்ஸ் உற்பத்தி செய்யும் சிறு, குறு நிறுவனங்கள் மட்டும் 500க்கும் மேற்பட்டவை இம்மாவட்டங்களில் இயங்கி வருகின்றன. இவைகளும் உள்ளூர் தேவை போக மேற்கண்ட நகரங்களும், மாவட்டங்களுக்கும் ஏற்றுமதியாகின்றன. இவற்றை நம்பி 5 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி நள்ளிரவு முதல் தங்கள் இயக்கத்தை நிறுத்தி வைத்திருந்த செங்கல் சூளைகளும், ஹாலோ பிரிக்ஸ் தொழிற்கூடங்களும் சமீபத்தில் அரசு அறிவித்த தளர்வுகள் மூலம் நேற்று முதல் இயங்கத்தொடங்கியுள்ளன. இதன் மூலம் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை ஓரளவு பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.அதேபோல் கட்டுமான தொழிலுக்கான மூலப்பொருட்கள் கிடைக்காமலும், ஊரடங்கு காரணமாகவும் முடங்கியிருந்த கட்டுமான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் ஓரளவு நிறைவு பெறும் என்று நம்பப்படுகிறது. அதேநேரத்தில் சிமென்ட் ெதாழிற்சாலைகள் முடக்கத்தால் சிமென்ட் தட்டுப்பாடு என்பது இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரிகிறது. சிமென்ட் உற்பத்தி மீண்டும் தொடங்கினால்தான் கட்டுமான தொழிலை நம்பியுள்ளவர்களின் நிலை மாறும் என்பதே உண்மை என்கின்றனர் இவர்கள்.



Tags : businesses , permission , Brick kilns ,Halo Prix ,relief
× RELATED சிறு வணிகர்களுக்கான வணிக வரி சமாதான...