×

மீன், கோழிக்கறி விலை உயர்வை தொடர்ந்து ஆட்டிறைச்சி விலை ரூ.1000த்தை எட்டியது: அசைவ பிரியர்கள் புலம்பல்

ஸ்பிக்நகர்:தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கினால் மீன், கோழிக்கறி விலை உயர்வை தொடர்ந்து ஆட்டிறைச்சியின் விலையும் உயர்ந்து ரூ.1000த்தை எட்டியது. இதனால் சாமானியர்கள் வாங்க முடியாமல்‘ புலம்பி வருகின்றனர்.கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. தகுந்த விதிமுறைகளின் படி கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இதனால் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் அசைவ பிரியர்களின் மனதில் முதலிடத்தில் இருந்த மீனை அதிகளவு மக்கள் வாங்கி சாப்பிட்டனர். அதற்கு நல்ல வரவேற்பு இருந்ததால் அதன் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. ஆரம்பத்தில் 1 கிலோ 150க்கு விற்பனை செய்யப்பட்ட மீன்கள் தற்போது 250க்கு மேல் விற்பனையாகிறது. குளங்களில் உள்ள மீன்களும் பிடித்த உடனேயே விற்று தீர்ந்துவிடுகிறது. தற்போது தடைக்காலம் என்பதால் கடல் மீன் வரத்தும் குறைவாக உள்ளது.
சமூக வலைதளங்களில் பரவிய தவறான தகவலால் கோழி இறைச்சியை வாங்குவதற்கே மக்கள் அஞ்சினர். இதுவும் சில நாட்கள் மட்டுமே நீடித்தது. பின்பு 1 கிலோ கோழி இறைச்சியின் விலை 200யை தாண்டியது.

சாதாரண நாட்களிலேயே கிலோ ரூ.600க்கு விற்று வந்த ஆட்டிறைச்சி ஊரடங்கு காலத்தில் தட்டுப்பாடு காரணமாக அதன் விலையும் ரூ.1000த்தை தொட்டுவிட்டது.
இதனால் ஞாயிறன்று மட்டும் தெருவிற்கு தெரு ஆட்டிறைச்சி கடைகள் முளைத்துள்ளன. தூத்துக்குடியில் நேற்று என்றுமில்லாத அளவிற்கு ஆட்டிறைச்சி தனிக்கறி கிலோ ரூ.1000 முதல் ரூ.1100 வரையிலும், எலும்புக்கறி கிலோ ரூ.850 முதல் ரூ.950 வரையிலும் விற்பனையானது.பொதுமக்கள் சமூக விலகலுடன் நின்று வாங்கினர். பல கடைகளில் முன்னரே கால், அரை, முக்கால், ஒரு கிலோ என தனித்தனியாக பார்சல் செய்யப்பட்டு விற்கப்பட்டது.எட்டயபுரம் ஆட்டுச்சந்தை இல்லாததாலும், போதியளவு ஆடுகள் கிடைக்காததாலும் இந்த விலை உயர்வு என வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் கிராமங்களில் பிரதான தொழிலாக உள்ள ஆடு வளர்ப்பு தற்போது பணம் காய்க்கும் மரமாகவே மாறிவிட்டது.

மேலும் விரைவில் ரம்ஜான் பண்டிகையும் வர உள்ளதால் ஆடுகளின் விலை குறைவதற்கான வாய்ப்பே இல்லை. இதனால் சாமானியர்கள் ஆட்டிறைச்சியை விரும்பி வாங்கி உண்ண முடியாமல் புலம்ப துவங்கிவிட்டனர்.ஊரடங்கு முடிந்தால் மட்டுமே கோழி மற்றும் ஆட்டிறைச்சியின் விலை குறையும் என ஆடு வளர்ப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.



Tags : Fish ,Poultry ,goat prices,
× RELATED கலசபாக்கம் அருகே 4,560 அடி உயரமுள்ள பர்வதமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம்