×

சென்னையில் இருந்து நாமக்கல் வந்த லாரி டிரைவர்கள் உள்பட 169 பேருக்கு பரிசோதனை: பள்ளி, கல்லூரிகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்

நாமக்கல்: சென்னையில் இருந்து நாமக்கல் வந்த லாரி டிரைவர்கள் உள்பட 169 பேருக்கு சோதனை சாவடியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் பள்ளி, கல்லூரிகளில் தனிமை படுத்தப்பட்டுள்ளனர் .நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர்களில் 50பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். 2 லாரி டிரைவர்கள், ஒரு போலீஸ்காரர் மற்றும் காளப்பநாய்க்கன்பட்டியை சேர்ந்த 2 குடும்பத்தை சேர்ந்த 7 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் மேலும் கொரோனா பரவாமல் தடுக்க, தற்போது சென்னையில் இருந்து வரும் நபர்கள், வெளி மாநிலங்களுக்கு சென்று விட்டு ஊர் திரும்பும் லாரி டிரைவர்கள், கிளீனர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதற்காக மாவட்டம் முழுவதும் 14 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை, போக்குவரத்து துறை அதிகாரிகள், சுழற்சி முறையில்  24 மணி நேரமும் பணியில் இருந்து கண்காணித்து வருகிறார்கள்.

 நேற்று வெளிமாநிலங்களில் இருந்து வந்த லாரி டிரைவர்கள், கிளீனர்கள் மற்றும் சென்னையில் இருந்து கார் மூலம் வரும் வந்தவர்கள் என மொத்தம் 169 பேருக்கு, மாவட்ட எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள 14 சோதனை சாவடிகளில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அருகாமையில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள். நாமக்கல் மாவட்ட எல்லையான மல்லூரில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில், நேற்று சென்னையில் இருந்து லாரி மூலம் வந்த குடும்பத்தினரும் பரிசோதனை செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டனர்.
 அதே போல், வளையப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில், வாகனங்களில் வருவோர்களின் உடல் வெப்பநிலையை இன்ஃப்ராரெட் தெர்மாமீட்டர் கொண்டு பரிசோதனை செய்யப்பட்டது. லாரி டிரைவர்கள் தங்களது விபரங்களை மைக் மூலம் தெரிவிக்க சோதனை சாவடியில் வசதி செய்யப்பட்டிருந்தது. குஜராத் மாநிலத்தில் வேலை செய்து வந்த 22பேர், நேற்று முன்தினம் சொந்த ஊரான நாமக்கல் அருகேயுள்ள கொசவம்பட்டிக்கு லாரி மூலம் வந்துள்ளனர். இவர்களில் இதுவரை 8 பேரை அடையாளம் கண்டு, சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை செய்து தனிமைப்படுத்தியுள்ளனர்.



Tags : Chennai ,lorry drivers ,Namakkal 169 ,Namakkal , 169 students, lorry drivers ,Chennai, Namakkal
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...