×

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஆபத்தை அறியாமல் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள்

வேலூர்: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தேசிய நெடுஞ்சாலையை ஆபத்தை அறியாமல் கடந்து செல்லும் வாகன ஓட்டிகளை கண்காணிப்பதுடன், இதுபோன்ற செயல்களை தடுக்க உரிய நடவடிக்கையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை- பெங்களூரு, சென்னை- மும்பை, விழுப்புரம்- மங்களூரு ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை கடந்து செல்கின்றன. இதில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓச்சேரி தொடங்கி வெலக்கல்நத்தம் வரை முக்கிய சாலை சந்திப்புகளில் பெரிய மேம்பாலங்களும், இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடந்து செல்ல குறுகிய சாலை மேம்பாலங்களும் அமைந்துள்ளன.
வேலூர் மாநகரை ஒட்டி சத்துவாச்சாரி, வள்ளலார், அலமேலுமங்காபுரம், கிரீன் சர்க்கிள், சேண்பாக்கம், கொணவட்டம், மேல்மொணவூர், அன்பூண்டி, பொய்கை, செதுவாலை ஆகிய இடங்களில் பெரிய மற்றும சிறிய மேமபாலங்கள் உள்ளன.

இந்த இடங்களில் இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சாலையை கடப்பதற்கு சர்வீஸ் சாலையை பயன்படுத்தி கடக்க வேண்டும். ஆனால் இந்த பாலங்களில் இருந்து சிறிது தொலைவில் உள்ள பகுதிகளில் இருந்து வரும் இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் இந்த பாலத்தை பயன்படுத்தாமல் தங்கள் பகுதியில் இருந்து நேரடியாக நெடுஞ்சாலையின் குறுக்காகவே சாலையை கடந்து செல்கின்றனர். அதேபோல் சத்துவாச்சாரியில் ஆர்டிஓ சாலை அருகே உள்ள சர்வீஸ் சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் ஏறும் பகுதியில் வாகனங்கள் செல்ல தடை ஏற்படுத்தி உள்ளதால் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சர்வீஸ் சாலைக்கும், சர்வீஸ் சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கும் இருசக்கர வாகனங்களில் செல்ல ஆவின் அருகே கற்களை போட்டு பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் அதிகளவில் விபத்துகள் ஏற்படுவதுடன் உயிரிழப்பும், உடல் ஊனமும் ஏற்படுகிறது. சமீபத்திய ஊரடங்கின்போது வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கிய நிலையில் விபத்துகளும் குறைந்திருந்தன. ஆனால் தற்போது அத்தியாவசிய தேவைகளுக்காக ஊரடங்கில் சிலவற்றுக்கு தளர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் வாகன போக்குவரத்து தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் சாலையை விதியை மீறி கடக்கும் ஆசாமிகளால் விபத்துக்கள் மீண்டும் அரங்கேறும் அபாயம் உள்ளது. எனவே, இவற்றை தடுப்பதற்கான உரிய நடவடிக்கையை தேசிய நெடுஞ்சாலை ஆணையமும், காவல்துறையும் மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags : drivers ,Tirupattur ,Ranipet ,National Highway ,districts ,Vellore , Two-wheeler, drivers, Vellore, Tirupattur,Ranipet districts
× RELATED ஒரே நாளில் ₹12.64 கோடிக்கு டாஸ்மாக்...