×

ஊரடங்கால் போக்குவரத்து முடக்கம் 25 டன் பூசணிக்காய் அழுகியது

உடன்குடி: ஊரடங்கு உத்தரவால் வாகன போக்குவரத்து முடங்கியதால் வெளியிடங்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் 25 டன் பூசணிக்காய்கள் அழுகி வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதிகளில் ஏராளமானோர் விவசாய பணியில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமாக இங்கிருந்து தர்ப்பூசணி, பூசணிக்காய்,  முருங்கை உள்ளிட்ட ஏராளமான விவசாய பொருட்கள் வெளியூர், வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.
உடன்குடி மெஞ்ஞானபுரம் பகுதியில் சுமார் 10 ஏக்கரில் பூசணிக்காய் நடவு செய்துள்ளனர். 85 நாட்களில் காய் விளைந்து விற்பனைக்கு தயாரானது. கடந்தாண்டு கிலோ ரூ.14க்கு விற்பனையானது. தற்போது கொரோனா தொற்று காரணமாக வாகனங்கள் சரிவர இயக்கப்படாமல் உள்ளது. இதனால் பூசணிக்காயை தேடுவாரில்லை. செடிகளில் இருந்து பறித்து குவித்து வைக்கப்பட்டுள்ளத பூசணிக்காயை வெளியூரில் இருந்து வியாபாரிகள் வாங்கிச் செல்ல வராததால் அவை அழுகி வருகிறது.

இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பறிக்கப்படாமல் செடிகளில் உள்ள பூசணிக்காய்களும் பழுத்து அழுகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.இதுகுறித்து விவசாயி செந்தில் கூறுகையில், மெஞ்ஞானபுரம் பகுதியில் பலர் பூசணிக்காய் சாகுபடி செய்துள்ளனர். தற்போது விளைந்த காய்களை தோட்டங்களில் குவித்து வைத்துள்ளோம். கொரோனா காரணமாக வெளியிடங்களுக்கு கொண்டு செல்ல முடியாத இக்கட்டான நிலை உள்ளது. இதனால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வியாபாரிகளும், கமிஷன் ஏஜெண்டுகள் யாரும் வரவில்லை. இதனால் சுமார் 25 டன் பூசணிக்காய் அழுகி வருகிறது. எனவே அரசும், மாவட்ட நிர்வாகமும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Curfew ,traffic ,freeze, 25 tonnes ,pumpkin rotten
× RELATED தமிழ்நாட்டில் 10,12ம் வகுப்பு...