வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: வெப்ப சலனம் மற்றும் வளிமண்டலத்தின் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மூன்றாம் கட்ட ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் பல இடங்களில் ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் சற்று வெளியே வரத் தொடங்கியுள்ள நிலையில் அக்னி நட்சத்திரமும் இன்று தொடங்கி வெயில் வாட்டி வதைக்கிறது. வெயில் ஒருபக்கம் வெளுத்து வாங்கினாலும் சில மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை காலையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன், பிற்பகலில் தெளிவாகவும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசஸ் ஆகவும் பதிவாகும். கரூர், திருச்சி, மதுரை, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 40 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் வேலை செய்வதை தவிர்க்க வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் சிவகோனம், கலியால் ஆகிய இடங்களில் 3 சென்டி மீட்டர் மழையும், சூரலகோடு, சித்தாரில் 2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

Related Stories:

>