×

கொரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்த 750 திருமண மண்டபங்களில் முகாம்கள்;பள்ளி, கல்லூரிகளில் 50,000 படுக்கைகள் : சென்னையில் மோசமாகும் நிலை!!

சென்னை : சென்னையில் நிலைமை மோசமாவதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த 750 திருமண மண்டபங்கள் மாநகராட்சி கட்டப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு முகாம்கள் அமைக்கும்பணி நடைபெற்று வருகிறது. மேலும் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் 50 ஆயிரம் படுக்கைகள் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்து உள்ளது.ஆரம்பத்தில் இருந்தே சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.

சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்குள்ள படுக்கைகள் நிரம்பிவிட்டதால் புதிதாக படுக்கைகளை அமைப்பதற்கான மாற்று இடங்களை தேட வேண்டிய கட்டாய நிலை அரசுக்கு ஏற்பட்டு உள்ளது.

இதனால், நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் 50 ஆயிரம் படுக்கைகள் அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.தற்போது வரை 4 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. அடுத்த வாரத்துக்குள் 10 ஆயிரம் படுக்கைகள் தயாராகிவிடும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.முதல் 25 ஆயிரம் படுக்கைகளை கல்லூரிகளிலும், அடுத்த 25 ஆயிரம் படுக்கைகளை அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகளிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் சென்னையில் உள்ள 750 திருமண மண்டபங்களும் மாநகராட்சியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, முகாம்களாக மாற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.நோய்த் தொற்றும் வேகம் அதிகரிப்பதாலும், லட்சக்கணக்கில் படுக்கை வசதி தேவைப்படுவதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி சார்பில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Tags : wedding camps ,Chennai ,Corona ,victims ,schools ,colleges ,camps ,residents , Corona, wedding halls, camps, school, colleges, beds, Chennai
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...