×

மாநில காங். சார்பில் கட்டண தொகை அளிக்கப்படும்; சிறப்பு ரயிலில் பயணிக்கும் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிப்பதற்கு சோனியா காந்தி கண்டனம்

புதுடெல்லி: கொரோனா தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுபோக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்து வந்தனர். அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக ரயில்வே 6 சிறப்பு ரயில்களை அறிவித்தது. இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் கடந்த 1-ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஐதராபாத் -  ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு மாலை 4.50 மணிக்கு 1200 வெளிமாநில தொழிலாளர்களுடன் முதல் ரயில் புறப்பட்டு சென்றது.

இதேபோல் மகாராஷ்டிராவின் நாசிக் - உபியின் லக்னோவுக்கு இரவு 9.30 மணிக்கு மற்றொரு ரயில் புறப்பட்டு சென்றது. கேரளாவின் அலுவா - ஒடிசாவின் புவனேஸ்வருக்கு மாலை 6மணிக்கும், நாசிக் - மத்தியப் பிரதேசத்தின் போபாலுக்கு இரவு 8 மணிக்கும், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் - பீகாரின் பாட்னாவுக்கு இரவு 10 மணிக்கும், ராஜஸ்தானின் கோட்டா - ஜார்க்கண்டின் ஹாதியாவுக்கு இரவு 9 மணிக்கு ஒரு ரயில் என 5 ரயில்கள் புறப்பட்டு சென்றன. இந்த ரயில்கள் புறப்பட்ட இடம் மற்றும் சேரவேண்டிய இடம் என 2 இடங்களில் மட்டுமே நிற்கும். சமூக இடைவெளியை பின்பற்றி 1000 முதல் 1200 பயணிகளே இந்த ரயிலில் பயணம் செய்தனர்.

ராஜஸ்தானின் கோட்டா மற்றும் ஜெய்ப்பூரில் இருந்து நேற்று இரவு 9 மணிக்கு தலா ஒரு ரயில்கள் புறப்பட்டு ஜார்க்கண்டுக்கு சென்றன. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அடையாள அட்டையுடன்  தகுந்த பயணச்சீட்டுடன் வந்தவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லாத பட்சத்தில் தான் பயணத்துக்கு அனுமதிக்கப்பட்டது. பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். இவர்களுக்கான உணவு மற்றும் குடிநீரை அனுப்பிவைக்கும் மாநில அரசு செய்து தந்திருந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்த சிறப்பு ரயிலில் பயணம் செய்ய தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்த வண்ணம் உள்ளனர். சிறப்பு ரயிலில் பயணிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிப்பதற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், வெளி நாடுகளில் உள்ளவர்களை அழைத்து வர மத்திய அரசு ரூ.100 கோடி செலவு செய்துள்ளது. கொரோனா நிவாரணமாக பிரதமர் நிதிக்கு ரூ.151 கோடியை ரயில்வே அளித்துள்ளது. இருப்பினும், இந்த கடினமான நேரத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் ரயில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது கண்டனத்துக்குரியது. மாநில காங்கிரஸ் சார்பில் ரயில் கட்டணத்திற்கான தொகை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.



Tags : train workers ,Sonia Gandhi , State Cong. Payment of proceeds on behalf of; Sonia Gandhi denounces charging train workers on special train
× RELATED மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் சோனியா காந்தி..!!